Published : 18 Sep 2013 11:20 AM
Last Updated : 18 Sep 2013 11:20 AM
பெரியார் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. பல்வேறு அமைப்பினர் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, இடதுசாரி கட்சியினர், தலித் அமைப்புகள், பெண்கள் அமைப்பினர் என பெரியார் பிறந்த நாளை பலரும் கொண்டாடுகின்றனர். பெரியார் வாழ்ந்த காலத்தில் திராவிட இயக்கத்தின் ஒரு தலைவராக மட்டுமே பார்க்கப்பட்ட பெரியார், இன்று திராவிட இயக்கத்தின் எல்லையைக் கடந்த பொதுத் தலைவராக பரிணாமம் பெற்றிருக்கிறார்.
இது குறித்து பெரியாரியச் சிந்தனை கொண்டவரான கருப்பு பிரதிகள் பதிப்பகத்தின் நீலகண்டன் கூறுகையில், 1990களில் நடந்த மண்டல் கமிஷன் அறிக்கை தொடர்பான நிகழ்வுகள், அம்பேத்கர் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு போன்றவை பெரியார் மற்றும் அம்பேத்கரின் அவசியத்தை ஜனநாயக அமைப்புகளுக்கு உணர்த்தின. இந்தியாவில் நடைபெறும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு வர்க்கப் போராட்டங்களால் மட்டுமே தீர்வு காண முடியாது என்ற புரிதலை இடதுசாரி கட்சிகளுக்கு ஏற்படுத்தியதால்தான் பெரியாரின் 125-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஆண்டு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்தினர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைப் போராட்டங்களுக்கு உரமூட்டக் கூடியவராக அம்பேத்கருக்கு இணையான வழிகாட்டியாக பெரியாரை தலித் அமைப்புகள் கருதின.
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் முன்னெடுத்தப் போராட்டங்களுக்கு கருத்தியல் ரீதியாக வலுவான ஆதரவை தமிழ்நாடு நல்குவதற்கு 1927-ம் ஆண்டிலேயே பெண்களுக்கான சொத்துரிமை, பாலின சமத்துவம் பற்றி பேசிய பெரியார்தான் காரணம் என்பது உணரப்பட்டது. இதுபோன்ற பல காரணங்களாலேயே எல்லைகளைக் கடந்தவராக, சமூக, அரசியல் விடுதலைக்காகப் போராடும் பல்வேறு அமைப்புகளுக்கு கருத்தியல் ரீதியாக வழிகாட்டுபவராக பெரியார் திகழ்கிறார்’’ என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறும்போது, தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறைகள் மோசமாக இருந்த காலகட்டத்தில், அதற்கு எதிராக கீழத் தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. இந்நிலையில் 20-ம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்த இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் பெரியாரின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. பெரியாருக்குப் பின் சாதி ஒழிப்பு இயக்கங்களை நடத்துவதில் திராவிடக் கட்சிகள் தவறி விட்ட நிலையில், சாதி ஒழிப்புக்கான இயக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முனைப்போடு நடத்தி வருகிறது.
பெரிய கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. போன்றவை சாதி ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாத காரணத்தால் சாதிய கொடுமைகள் தொடர்கின்றன. இந்நிலையில் பெரியார் தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறார். அவரது அணுகுமுறைகள் தொடர்ந்து தேவையாக உள்ளன’’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் கூறும்போது, சாதிய ஒடுக்குமுறைகள் நிறைந்த இந்திய சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த, மார்க்சிய கருதுகோல்களுடன் மிக நெருக்கமான, நட்புபூர்வமான தொடர்பைக் கொண்டதுதான் பெரியாரியம். இந்தக் கருத்து நிலையின் காரணமாகவே சிங்காரவேலர் காலந்தொட்டு பெரியாரை இணைத்துக் கொண்டு கம்யூனிஸ்டுகள் இயங்கி வருகின்றனர்’’ என்றார் மகேந்திரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT