Published : 09 Dec 2013 12:00 AM
Last Updated : 09 Dec 2013 12:00 AM

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு மத்திய அரசு நிதியில் 1,100 புதிய பஸ்கள்

மத்திய அரசு நிதி உதவியுடன் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 1100 புதிய பஸ்கள் வழங்கப்பட உள்ளன.

இந்தியாவில் 2030-ம் ஆண்டுக்குள் நகரங்களில் வசிப்போரின் எண்ணிக்கை 2 மடங்காக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 2005-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இத்திட்டத்தின் மூலம் பெரிய நகரங்களின் உள்கட்டமைப்பு, ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி போன்றவற்றுக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது. 3 ஆண்டுக்கு ஒருமுறை பெரிய நகரங்களுக்கு சுழற்சி முறையில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி 2013-14ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களுக்கு 10 ஆயிரம் பஸ்கள் வாங்க மத்திய அரசு நிதி வழங்க உள்ளது. பஸ்கள் வாங்குவதற்கான மொத்த நிதியில் 35 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 65 சதவீத நிதியை மாநில அரசும் போக்குவரத்துக் கழகங்களும் ஏற்றுக் கொள்ளும்.

இந்நிலையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 1100 புதிய பஸ்கள் வாங்க 35 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கவுள்ளது. மேலும், ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் மூலம் பயன்பெறும் நகரங்களின் எண்ணிக்கையும் 28-ல் இருந்து 66 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மேலும் சில நகரங்களுக்கு புதிய பஸ்கள் வாங்க நிதி கிடைக்கும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

மத்திய அரசின் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 28 நகரங்கள் நிதியுதவி பெறுகின்றன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. தற்போது இத்திட்டம் 66 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் மேலும் சில நகரங்களுக்கு மத்திய அரசு நிதி கிடைக்கும். எந்தெந்த நகரங்கள் என்று இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

2013-14ம் ஆண்டில் மொத்தம் 10 ஆயிரம் பஸ்கள் வாங்க மத்திய அரசு 35 சதவீத நிதியை அளிக்க உள்ளது. இதில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 1100 பஸ்கள் வாங்க நிதி கிடைக்கும். நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் படிப்படியாக பஸ்கள் கொண்டு வரப்படும்.

புதிய பஸ்கள் வரவர, மிகப் பழமையான பஸ்கள் நீக்கப் படும். தேவைப்படும் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப் படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x