Published : 24 Jan 2017 02:47 PM
Last Updated : 24 Jan 2017 02:47 PM
பவானிக்கு குறுக்கே தற்போது கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணைகள் மூலம் 15 ஆயிரம் ஏக்கருக்கு புதிய பாசனத் திட்டங்களை உருவாக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது கட்டப்படும் 6 அணைகள் மூலம் 1.5 டிஎம்சி தண்ணீர் பவானியில் எடுக்க உள்ளதாகவும், அதில் அட்டப்பாடி பகுதிகளில் 6 ஆயிரம் ஏக்கர் புதிய பாசனத் திட்டங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித் துள்ளனர்.
இதை தடுத்து நிறுத்துவதோடு, கேரளாவில் நடக்கும் இந்த நடவடிக்கைகள் குறித்து தெளிவான விளக்கத்தை தமிழக அரசும், பொதுப்பணித் துறை அதிகாரிகளும் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
பவானி, சிறுவாணி நதி நீர் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும், மதிமுகவைச் சேர்ந்த கோவை ஈஸ்வரன் இதுகுறித்து கூறியதாவது:
அட்டப்பாடியில் மரம் வளர்ப்பு உட்பட 130 சதுர கிலோமீட்டர் பகுதிகளில் விவசாயம் செய்யப்படுகிறது. இதில் 16,500 ஏக்கர் பாசனப்பகுதிகள் என்றும், அதற்கு 37 பம்ப் செட் பாசனத் திட்டங்களும், 310 குளங்களும் உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றுக்கு ஆதாரமாக சிறுவாணி மற்றும் பவானி நதிகளே உள்ளன. இதுமட்டுமின்றி, மல்லிக்கரை ஆறு, வரகலாறு ஆகிய பவானி கிளை ஆறுகளிலும் சிறு தடுப்புகள் கட்டி, அதிலிருந்து பாசன வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, பாசன வசதிகளை கேரள அரசே செய்து கொடுத்துள்ளது. இதற்காக எத்தனை டிஎம்சி தண்ணீரை கேரளா பயன்படுத்தி வருகிறது என்ற விவரங்கள் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் உள்ளதாகத் தெரியவில்லை.
தற்போது கட்டப்பட்டு வரும் தடுப்பணைகள் மூலம் 1.5 டிஎம்சி தண்ணீரை எடுக்க முடியும். அதன் மூலம் 6 ஆயிரம் ஏக்கர் புதிய பாசனத் திட்டங்களை உருவாக்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
பவானி ஆற்றில் முக்காலிக்கும் மேலே தொடுக்கி என்னும் இடத்தில் தடுப்பணை கட்டியும், வரகலாற்றின் குறுக்கே அரலி என்னும் இடத்தில் ஒரு தடுப்பணை கட்டியும் சுமார் 0.7 டிஎம்சி தண்ணீர் எடுத்து, புதிய பாசனத் திட்டத்துக்குப் பயன்படுத்தவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 3,500 ஏக்கர் வரை பாசன வசதி அளிக்க ஏற்பாடு உள்ளது.
சிறுவாணிக்கு குறுக்கே அணை கட்டினாலும் 2.87 டிஎம்சி தண்ணீர் மட்டுமே எடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கேரள அரசு கட்டும் அணையிலிருந்து ஆண்டுக்கு 4.5 டிஎம்சி வரை தண்ணீர் எடுக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் 15 ஆயிரம் ஏக்கர் வரை பாசனம் மேற்கொள்ள கேரள அரசு திட்டமிட்டுள்ளது. கேரள அரசின் இந்த திட்டங்களையெல்லாம் கவனித்து, இதற்கேற்ப செயல்படாவிட்டால் தமிழகப் பகுதிகளில், குறிப்பாக கோவை மண்டலத்தில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்றார்.
பணிக்கு சாதகம்?
தேக்குவட்டை, பாடவயல், மஞ்சிக்கண்டியில் பவானி ஆற்றுப் பகுதிகளில் தற்போது அணை கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு தமிழக பத்திரிகையாளர்கள் வரமுடியாத அளவுக்கு கேரள காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அணை கட்டும் பகுதிகளுக்கு, தமிழகத்திலிருந்து சாவடியூர், கீழ்தாவளம் கிராமங்கள் வழியே செல்லமுடியும். அங்கெல்லாம் தற்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை மீறிச் செல்லும் தமிழக வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக அட்டப்பாடியில் வசிக்கும் தமிழர்கள் தெரிவிக்கின்றனர். அணைகள் கட்டப்படும் பகுதிகளிலும் 100-க்கும் மேற்பட்ட கேரள போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டமும், அசாதாரண சூழலும் இங்குள்ள அதிகாரிகளுக்கு சாதகமாக உள்ளது. கூடுதல் ஆட்களைக் கொண்டும், கூடுதல் இயந்திரங்களைப் பயன்படுத்தியும் 15 நாட்களில் 3 அணைகளின் பணிகளையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். உடனடியாக தமிழக அரசு சுதாரிக்காவிட்டால் சிக்கல்தான்” என்று அட்டப்பாடியில் வசிக்கும் தமிழர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளா மாநிலம் அட்டப்பாடி தேக்குவட்டை கிராமத்தில் பவானி ஆற்றின் குறுக்கே நடைபெறும் தடுப்பணை கட்டுமானப் பணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT