Published : 20 Jun 2015 10:22 AM
Last Updated : 20 Jun 2015 10:22 AM

உதகை: சந்தன மரம் வெட்டிக் கடத்திய 8 பேர் கைது

உதகை அருகே சின்ன குன்னூர் பகுதியில் சந்தன மரம் வெட்டிக் கடத்த முயன்ற 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

உதகை அருகேயுள்ளது சின்ன குன்னூர் கிராமம். நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சிலர் மரம் வெட்டிக் கொண்டிருப்பதை ஊர் மக்கள் கண்டுள்ளனர்.

உடனடியாக தேனாடு கம்பை போலீஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில், போலீஸார் ஜீப்பில் சென்ற 8 பேரை மடக்கினர். அவர்களிடம் இரண்டு சந்தன மரத்துண்டுகள் இருந்தன.

இதன் பேரில் ஜீப் ஓட்டுநர் ரிச்சர்டு (41) தாளவாடியை சேர்ந்தவர். சத்தியமங்கலம் அந்தோணி ஜோசப் (21), சூசையபுரம் அந்தோணிசாமி (34), கருப்புசாமி (26), செந்தில் (22), கருப்புசாமி (28), முல்லை நகர் சின்ன காளியப்பன் (55), காளப்பட்டி அந்தோணிராஜ் (31) ஆகியோரை தேனாடு கம்பை போலீஸார் கைது செய்தனர்.

சம்பவ இடத்தை போலீஸார், வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

தேனாடு கம்பை ஆய்வாளர் தண்டபாணி கூறும்போது, ‘இந்த கும்பலில் ஒருவன் சின்ன குன்னூர் பகுதியில் சாலை பணி செய்து வந்தபோது, இப்பகுதியில் சந்தன மரம் இருப்பதை அறிந்து மற்றவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் இவர்கள் 8 பேர் மரத்தை வெட்டிக் கடத்த வந்துள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகேயுள்ள மரத்தை வெட்டி, கீழே உள்ள சுடுகாட்டில் தள்ளிவிட்டு, அங்கு மரத்தை சிறு துண்டுகளாக்கி ஜீப்பில் கடத்த கும்பல் திட்டமிட்டுள்ளது. மரத்தை வெட்டும்போது சப்தம் கேட்டு மக்கள் வந்ததால், இரண்டு மரத்துண்டுகளுடன் ஜீப்பில் சென்றபோது பிடிபட்டனர்’ என்றார்.

சந்தன மரம் வெட்டிக்கடத்தல் என தெரியவந்ததால் போலீஸார் வழக்கை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட மரத்துண்டு 7 கிலோ மட்டுமே இருந்துள்ளது. 40 கிலோவுக்கு மேல் இருந்தால் மட்டுமே வனத்துறையால் வழக்கு பதிவு செய்ய முடியும். அதற்கு கீழே இருந்தால், வழக்கு தள்ளுபடி ஆகும் என வனத்துறையினர் கை விரித்து விட்டனர். இதனால் நீண்ட இழுபறிக்கு பின்னர் தேனாடு கம்பை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் செந்தில் என்பவர் ஏற்கெனவே சங்கிலி பறிப்பு வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x