Published : 09 Jan 2014 12:00 AM
Last Updated : 09 Jan 2014 12:00 AM
எல்லா ரயில்களிலும் உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகள் அடங்கிய முதலுதவிப் பெட்டிகள் மற்றும் தீயணைப்புக் கருவிகளை வைக்குமாறு ரயில்வே துறைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் கீழ்மருவத்தூரைச் சேர்ந்த ஆர்.கண்ணன் கோவிந்தராஜூலு பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
நாட்டில் நடக்கும் பல ரயில் விபத்துகளுக்கு தீ பரவுதல் முக்கியக் காரணமாக உள்ளது. மீட்புக் குழுவினர் உடனடியாக சென்று சேர முடியாத தொலைதூர பகுதிகளில் பல விபத்துகள் நடப்பதால், உரிய முதலுதவி கிடைக்காமல் பலர் உயிரிழக்கின்றனர்.
ஆகவே, அனைத்து ரயில்களிலும் தீயணைக்கும் கருவிகளையும், போதுமான மருந்துகள் கொண்ட முதலுதவிப் பெட்டிகளையும் வைக்கக் கோரி ரயில்வே அமைச்சகத்தை அணுகினேன்.
எனினும் நாடு முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும் நிலையில், ரயில்களில் தீயணைப்புக் கருவிகள் பொருத்தும் திட்டம் இல்லை என்று ரயில்வே வாரியம் எனக்கு பதில் அனுப்பியது.
மேலும், உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகளைக் கொண்ட முதலுதவிப் பெட்டிகள் ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட 162 ரயில்கள் மற்றும் 156 முதல் தர ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. மற்ற ரயில்களில் சாதாரண முதலுதவிப் பெட்டிகளே உள்ளன.
உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளைக் கொண்ட முதலுதவிப் பெட்டிகளில், விபத்தில் சிக்கிப் போராடுவோரைக் காப்பாற்றும் வகையில் பல்வேறு வகையான மருந்துகள் இருக்கும்.
ஆனால் சாதாரண முதலுதவிப் பெட்டிகளில் வெறும் 25 கிராம் டியூப் மருந்து, 20 பாரசிடமல் மாத்திரைகளைக் கொண்ட அட்டை, கொஞ்சம் கட்டுத் துணி உள்ளிட்ட சில மருந்து வகைகள் மட்டுமே இருக்கும்.
இதுபோன்ற முதலுதவிப் பெட்டிகளைக் கொண்டு ரயில் விபத்துகளில் சிக்கியுள்ளவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க இயலாது.
ரயில்களில் செல்லும் பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும். ஆகவே, அனைத்து ரயில்களிலும் தீயணைப்பு கருவிகளைப் பொருத்தவும், எல்லா ரயில்களிலும் உயிர் காக்கும் அத்தியா
வசிய மருந்துகளைக் கொண்ட முதலுதவிப் பெட்டிகளை வைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கண்ணன் கோவிந்த ராஜூலு தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனு தொடர்பாக பிப்ரவரி 11-ம் தேதிக்குள் ரயில்வே துறை பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT