Published : 17 Jan 2014 08:20 AM
Last Updated : 17 Jan 2014 08:20 AM

துறைமுக நிலங்களை 30 ஆண்டு வரை குத்தகைக்கு விட அனுமதி: துறைமுகங்களின் வருவாய் அதிகரிக்கும்

மத்திய அரசின் பெரிய துறை முகங்களுக்கான புதிய நில மேலாண்மை கொள்கையால் சென்னை, எண்ணூர் துறைமுகங் கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை 30 ஆண்டுகள்வரை குத்தகைக்கு விடமுடியும். இதன்மூலம் இந்த இரு துறை முகங்களின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும்.

இதுதொடர்பாக சென்னை துறை முக பொறுப்புக்கழகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா சென்னையில் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:-

30 ஆண்டுவரை குத்தகை

பெரிய துறைமுகங்களுக்கான புதிய நில மேலாண்மை கொள்கையை மத்திய கப்பல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பெரிய துறைமுகங்களின் வளர்ச்சியை தடுத்துவந்த தடைகள் இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய விதிமுறைகளின்படி, பெரிய துறைமுகங்களுக்குச் சொந்தமான நிலத்தை 11 மாதங்கள் வரை மட்டுமே குத்தகைக்கு விட முடியும்.

ஆனால், புதிய கொள்கையின் படி, நீண்ட கால அடிப்படையில் 30 ஆண்டுகள்வரை குத்தகைக்கு விடமுடியும். நடுத்தர கால அடிப்படையில் 5 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடலாம். இதன்மூலம் சிறிய துறைமுகங்களைப் போன்று பெரிய துறைமுகங்களும் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை நீண்ட காலம் குத்தகைக்கு விட முடியும்.

வருவாய் அதிகரிக்கும்

புதிய முறையில் குத்தகை எடுக்க விண்ணப்பிப்பது எளிதானது, வெளிப்படைத்தன்மை கொண்டது. துறைமுக வர்த்தகம் பற்றிய அனுபவம் இல்லாதவர்கள்கூட எளிதாக நிலத்தை குத்தகை எடுத்து வர்த்தகத்துக்கு பயன் படுத்திக்கொள்ள முடியும். குத்தகை கட்டணத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசுத் துறை களுக்கும் 75 சதவீதம்வரை கட்டணச் சலுகை அளிக்கப்படும்.

துறைமுக நிலத்தை விளை யாட்டு மேம்பாடு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கும் பயன்படுத்திக்கொள் ளலாம். துறைமுக நிலங்களை 30 ஆண்டுகள்வரை குத்தகைக்கு எடுக்க முடிவதால் நீண்ட கால அடிப்படையில் நிலத்தை தனியார் பயன்படுத்த முடியும். சென்னை துறைமுகத்துக்கு 600 ஏக்கர் அளவுக்கு நிலம் உள்ளது. தற்போது நில குத்தகை மூலம் ஆண்டுக்கு ரூ.226 கோடி வருமானம் கிடைத்து வருகிறது.

பழைய கொள்கையால் மொத்த நிலத்தில் 50 சதவீதம் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. புதிய நில மேலாண்மை கொள்கை யால் அனைத்து நிலங்களையும் குத்தகைக்கு விட்டால் அதன் மூலம் ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி வரை வருவாய் அதிகரிக்கும்.

அதேபோல், கடலில் தூர் வாருவதற்கான (டிரெட்ஜிங்) புதிய கொள்கையும் வெளி யிடப்பட்டுள்ளது. புதிய கொள் கையின்படி, தூர்வாரும் பணியில் அரசுத்துறையும் ஈடுபட முடியும்.

இவ்வாறு அதுல்ய மிஸ்ரா கூறினார்.

எண்ணூர் துறைமுகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.சி. பாஸ்கராச்சார் கூறுகையில், “பழைய கொள்கையால் பெரிய துறைமுகங்கள் நிலத்தை குத் தகை விடுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டன. நீண்ட கால குத்தகைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற வேண்டும். புதிய முறையில் 30 ஆண்டுகள் வரையிலான குத்தகை காலத்துக்கு துறைமுக அளவிலேயே ஒப்புதல் வழங்கலாம். எண்ணூர் துறைமுகத்துக்கு சொந்தமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. அவற்றை எளிதாக குத்தகைக்கு விட முடியும்” என்றார்.

முன்னதாக, சென்னை துறைமுக பொறுப்புக்கழகத் துணைத் தலைவர் பி.சி.பரிதா, புதிய நில மேலாண்மை கொள்கையின் சிறப்பம்சங்களை விவரித்தார், பேட்டியின்போது, எண்ணூர் துறை முக இயக்குநர் (செயல்பாடு) சஞ்சய்குமார் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x