Published : 17 Feb 2014 06:37 PM
Last Updated : 17 Feb 2014 06:37 PM
வாகனங்களுக்கான உற்பத்தி வரி குறைப்பு மூலம், மத்திய பட்ஜெட் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே பலன் தருவதாக இருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள 2014-2015 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்டுக் கூறும்படியான திட்டங்கள் எதுவும் இல்லை.
எதிர்வரும் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமைய இருக்கின்ற புதிய அரசுதான், நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதாரச் சிக்கல்களுக்கு வழிகாண வேண்டும் என்று நிதியமைச்சர் கருதுகிறார்.
தமிழ்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, சேவை வரியிலிருந்து அரிசிக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இரத்த சேமிப்பு வங்கிகளுக்கு முழு வரிவிலக்கு வழங்கியது வரவேற்கக்கூடியது. இதைத் தவிர விலைவாசியைக் குறைக்கவோ, பெட்ரோல், டீசல், சமயல் எரிவாயு விலை உயர்வைத் தடுக்கவோ எந்தத் திட்டமும் இல்லை.
பணவீக்க விகிதம் 7.3 விழுக்காட்டில் இருந்து, 5.05 விழுக்காடாகக் குறைந்துவிட்டது என்று நிதி அமைச்சர் கூறுகிறார். ஆனால், சந்தையில் விலையேற்றம் கட்டுக்குள் இல்லை என்பதே உண்மை நிலை ஆகும்.
கடந்த பத்து ஆண்டுக் காலத்தில் 9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி என்று பிரதமரும், நிதி அமைச்சரும் உறுதி அளித்தது பகல் கனவாகவே முடிந்து, 4.7 விழுக்காடு மட்டுமே எட்ட முடிந்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மைத்துறையின் பங்களிப்பு கடந்த பத்து ஆண்டுக் கால காங்கிரÞ கூட்டணி ஆட்சியில் 2 விழுக்காட்டுக்கு கீழே வீழ்ச்சி அடைந்தது. ஆனாலும், வேளாண் விளைச்சல் 263 மில்லியன் டன்னாக பெருகி உள்ளது. இதன் பயன் விவசாயிகளுக்குக் கிட்டாமல் இடைத்தரகர்களும், இணையதள வணிகர்களும் கொள்ளையடிக்கவே மத்திய அரசின் கொள்கைகள் வழிவகுத்தன. வேளாண் கடன்களுக்கு வட்டிச் சலுகை அறிவிப்பு இல்லாதது விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ரசாயன உரங்களின் விலை 300 மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில், உர மானியத்துக்கான ஒதுக்கீடு ரூ. 76 ஆயிரம் கோடி என்பது போதுமானது அல்ல.
கல்வி மற்றும் மக்கள் நலன், பொது சுகாதாரத்துக்கான ஒதுக்கீடும் குறைவுதான். பன்னாட்டு, உள்நாட்டுப் பெரு நிறுவனங்களுக்கு சுமார் 53 இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் வேலைவாய்ப்பு பெருகுமா என்பதை நிதி அமைச்சர்தான் விளக்க வேண்டும்.
நாள் ஒன்றுக்கு நகர்புறத்தில் 32 ரூபாயும், கிராமப்புறங்களில் 20 ரூபாயும் வருமானம் ஈட்டுகிறவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேலே வாழ்வதாக திட்டக்குழு குறியீடு நிர்ணயித்தது. இதன்படி, நாட்டில் 14 கோடி மக்களின் வறுமை ஒழிந்து இருப்பதாக நிதி அமைச்சர் பெருமிதம் கொள்வதில் நியாயம் இல்லை. இன்னும் 70 விழுக்காடு இந்திய மக்களுக்கு உணவு பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று உணவு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்துவிட்டு, வறுமை ஒழிந்ததாகக் கூறுவது முரண்பாடாக உள்ளது.
அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மேலும் வாசல் திறக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறுகிறார். இதனால், நாட்டின் பொருளாதார இறையாண்மை முற்றாக அந்நியநாடுகளுக்கு அடகு வைக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறையும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. பொதுமக்களின் சேமிப்பை ஊக்குவிக்க உரிய திட்டங்கள் இல்லை. வருமான வரிவிதிப்பில் மாற்றம் செய்யப்படாதது இலட்சக்கணக்கான அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் தருகிறது.
வாகனங்களுக்கான உற்பத்தி வரி குறைப்பு மூலம், இந்த பட்ஜெட் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே பலன் தருவதாக இருக்கிறது.
மொத்தத்தில் சாதாரண ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் பயன்பெறக்கூடிய அம்சங்கள் எதுவும் மக்கள் விரோத மத்திய பட்ஜெட்டில் இல்லை" என்று வைகோ கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT