Published : 18 Feb 2014 01:50 PM
Last Updated : 18 Feb 2014 01:50 PM
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மரணத்தின் வாயிலில் 16 ஆண்டுகளாக நின்று கொண்டிருந்த 3 தமிழர்களையும் காப்பாற்றியுள்ள இத்தீர்ப்பு நிம்மதியும், நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. இது நீதித்துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பாகும்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் எந்த குற்றமும் செய்யாதவர்கள். தடா சட்டத்தின்படி, இவர்களிடம் சித்திரவதை செய்தும், மிரட்டியும் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் தான் இவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்பதை தொடக்கத்திலிருந்தே கூறி வருகிறேன்.
கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் செய்யப்படும் காலதாமதம் செய்யப்படுவது தவறு என்ற அடிப்படையில் தான் இத்தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்திருக்கிறது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்துக் காத்திருப்பது அதைவிடக் கொடுமையான தண்டனை என்று பல்வேறு தருணங்களில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அதன்படி பார்த்தால் இந்த மூவரும் செய்யாத குற்றத்திற்காக இரட்டை தண்டனையை எதிர்கொண்டு வந்தனர்.
ஆனாலும், இவர்கள் எந்தவித மன உளைச்சலுக்கும் ஆளாகவில்லை; சிறையில் முகவும் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்கள் என்று கூறி இவர்களை விடுதலை செய்யக் கூடாது என மத்திய அரசு வாதிட்டது. மனிதநேயமற்ற அந்த வாதத்தை நிராகரித்து இப்படி ஒரு தீர்ப்பை அளித்திருப்பதன் மூலம் இந்த மூவரை மட்டுமின்றி, சட்டத்தையும், மனித உரிமைகளையும் சேர்த்து உச்சநீதிமன்றம் காப்பாற்றி இருக்கிறது.
தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையில் கோகாய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள இந்த தீர்ப்பு மனித நேயம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரையும், ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரையும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்". இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT