Published : 30 Oct 2013 01:08 PM
Last Updated : 30 Oct 2013 01:08 PM
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த மீனவர்கள் 19 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம்த்தில் இருந்து செப்டம்பர் 18 அன்று மீன் பிடிக்கச் சென்ற 19 மீனவர்களையும் 5 படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் 19 பேரையும் இலங்கை காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின், அவர்கள் யாழ்பானம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடும் மீனவர்களை கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளையும் விடுவிக்கக் கோரியும், இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குவதோடு, அவர்கள் இடையூறின்றி மீன்பிடிக்க சூழ்நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அக்டோபர் 16ம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மீனவர்களின் காவல் புதன்கிழமையோடு முடிவடைந்ததையடுத்து மீனவர்கள் 19 பேரும் மீண்டும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி மகேந்திர ராஜா மீனவர்களை விசாரித்து விடுதலை பிறபித்து உத்திரவிட்டார். 5 விசைப் படகுகள் சார்ந்த விசாரணையை டிசம்பர் 3 அன்று தள்ளி வைத்தார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் வெள்ளிக்கிழமை தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அக்டோபர் 15 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்கள் 15 பேருக்கு நவம்பர் 11 வரை காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT