Published : 08 May 2017 09:30 AM
Last Updated : 08 May 2017 09:30 AM

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே போரில் உயிரிழந்த குறுநில மன்னனின் நடுகல் கண்டுபிடிப்பு: அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்க கோரிக்கை

பேரணாம்பட்டு அடுத்துள்ள ரங்கம்பேட்டை கிராமத்தில், போரில் உயிரிழந்த குறுநில மன்னனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் ரங்கம்பேட்டை கிராமம் உள்ளது. தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள இந்த கிராமத்தின் ஒரு பகுதியில் புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய நடுகல் மண்ணில் புதைந்துள்ளது. இதன் அருகிலேயே புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய மேலும் பல கற்குவியலும் உள்ளன.

இந்த வகை நடுகல் மிகவும் அரிதானது என்பதை எழுத்தாளர் அழகிய பெரியவன் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘‘இடிந்த நிலையில் இருந்த கல் மண்டபத்தின் ஒரு பகுதியில் குதிரை மீது ஏறிச் செல்லும் வீரனின் நடுகல் உள்ளது. மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நடுகல் பல்வேறு வகையிலும் சிறப்புடன் காணப்படுகிறது.

கையில் வாள் ஏந்தி குதிரை மீது அமர்ந்த வீரன் செல்வதும், உடன் 2 பெண்களும் பணியாட்களும் இருக்கிறார்கள். வேலூர் மாவட்டத் தின் பல இடங்களில் போர் வீரர்களின் நடுகல் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த நடுகல் ஒரு குறுநில மன்னன் அல்லது போர்ப்படைத் தளபதி யாக இருக்க வாய்ப்புள்ளது. பராமரிப்பின்றி இருக்கும் இந்த நடுகற்களை மீட்டு அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்க வேண்டும்.

அதேபோல், பேரணாம்பட்டு நகருக்கு அருகில் உள்ள சாராங் கல், சின்தலகணவாய், சின்னதாமல் செருவு உள்ளிட்ட கிராமங்களில் காணப்படும் நடுகற்களை, கிராம மக்கள் வழிபடுகின்றனர். அவற்றை யும் பாதுகாக்க வேண்டும்’’என்றார்.

இந்த நடுகல் குறித்து வரலாற்று ஆய்வாளர் அறம் கிருஷ்ணன் கூறும்போது, ‘‘இவை விஜயநகரப் பேரரசு காலத்துக்கு உட்பட்ட குறுநில மன்னனின் நடுகற்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. நீளமான வாள், அலங்காரம் செய்யப்பட்ட குதிரை, வெண் கொற்றக் கொடையுடன் நிற்கும் பணியாள், சாமரம் வீசும் பணியாள், அவரை வழியனுப்பும் 2 பெண்கள், உடன் இருக்கும் நாய் போன்றவை இதில் காணப்படுவதால் அவர் வேட்டைக்கு அல்லது போருக்குச் சென்று உயிரிழந்திருக்கலாம். இந்த நடுகல் , மிக நேர்த்தியாகவும் சிதையாமலும் இருக்கிறது’’ என்றார்.

இதுதொடர்பாக வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் கூறும்போது, ‘‘ஒருங் கிணைந்த வட ஆற்காடு மாவட் டத்தில் போளூருக்கு அருகே வெண் மணி கிராமத்தில் 9-ம் நூற்றாண்டு நடுகல் கண்டறியப்பட்டதுதான் இந்தப் பகுதியில் கிடைத்த மிகப் பழமையான நடுகல். அதற்குப் பிந்தைய காலத்துக்கு உட்பட்ட பல நடுகற்கள் கண்டறியப்பட் டுள்ளன.

கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் போர்ச்சூழல் அதிகம் நிறைந்த பகுதி என்பதால், வீரத்தை பறை சாற்றும் பல நடுகற்கள் இங்கு காணப்படுகின்றன. பேரணாம் பட்டில் காணப்படும் நடுகற்களை வருவாய்த் துறையினர் மீட்டுக் கொடுத்தால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்க தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x