Published : 08 Jun 2017 09:20 AM
Last Updated : 08 Jun 2017 09:20 AM
தமிழகத்தில் 70 புதிய மணல் குவாரிகள் தொடங்கி, மணல் தட்டுப்பாட்டைப் போக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் சேகர் ரெட்டி கைதுக்குப் பிறகு அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன. இதனால் கட்டுமானத் தொழில் முற்றிலுமாக முடங்கியது. மணல் தட்டுப்பாட்டைப் போக்க போர்க் கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்வர் கே.பழனிசாமியை பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகளுக்கு மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியிருப்பதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. திருச்சி, கரூர், விழுப்புரம், வேலூர், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் புதிய குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒவ்வொரு புதிய குவாரியும் 25 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகவும், அங்கு 30 முதல் 40 அடி ஆழம் வரை மணல் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மற்ற குவாரிகளைவிட கொள்ளிடத்தில் உள்ள குவாரிகளில் மணல் அதிகமாகக் கிடைக்கிறது. காவிரி ஆற்றிலும் கணிசமான அளவுக்கு மணல் உள்ளது. மணல் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும் உடனுக்குடன் புதிய மணல் குவாரிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய மணல் குவாரிக்கு அனுமதி வாங்குவதற்கு பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியதிருப்பதால் 2 முதல் 3 மாதங்கள் வரை ஆகிறது. தற்போது 21 மணல் குவாரிகள் செயல்படுகின்றன. அவற்றில் இருந்து தினமும் 7 ஆயிரம் யூனிட் மணல் எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக மணல் தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது” என்றார்.
போர்க்கால அடிப்படையில்..
தமிழகத்தில் இன்னமும் பெருமளவு மணல் தட்டுப்பாடு இருப்பதாக கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குறை கூறுகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம் கூறுகையில், “தற்போது திருச்சியில் 5 மணல் குவாரிகளும், விழுப்புரத்தில் ஒரு குவாரியும்தான் செயல்படுகின்றன. போர்க் கால அடிப்படையில் புதிய மணல் குவாரிகளைத் திறந்தால்தான் கட்டுமானத் தொழிலைக் காப்பாற்ற முடியும். திருநீர்மலை, மதுராந்தகம் போன்ற இடங்களில் உள்ள எம்-சாண்ட் தொழிற்சாலையிலும் போதிய அளவுக்கு எம்-சாண்ட் கிடைக்கவில்லை” என்றார்.
இந்நிலையில், மணல் தட்டுப் பாடு பிரச்சினை சட்டப்பேரவைக் கூட்டத்தில் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT