Last Updated : 13 Dec, 2013 12:00 AM

 

Published : 13 Dec 2013 12:00 AM
Last Updated : 13 Dec 2013 12:00 AM

கடலூரில் பழங்காலப் பொருட்கள் கண்டெடுப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் குளங்கள், கால்வாய்களில் தூர்வாரும்போது பண்டைய கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கிடைத்து வருகின்றன.

தொன்மையும் பழமையும் வாய்ந்த கடலூர் மாவட்டம் சங்க காலம் தொட்டே பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது.

17-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் கடல் கடந்து வாணிபம் செய்ய இந்தியாவுக்கு வந்தபோது முதன்முதலில் தென்னிந்தியாவில் தடம்பதித்த இடம் கடலூர். அவ்வாறு வந்தவர்களில் ஏலிகுஏல் என்பவர் கடலூரில் புனித டேவிட் கோட்டையை 1653-ல் கட்டினார். இந்த மாவட்டத்தின் வழியாக தென்பெண்ணை, வெள்ளாறு, கெடிலம், கல்லணை வழியாக கொள்ளிடம் வரும் காவிரி, கோமுகி உள்ளிட்ட ஆறுகள் தடம்பதித்து கடலில் கலக்கின்றன. நீர்வளமும் நிலவளமும் மட்டுமின்றி கனிம வளத்துக்கும் பெயர்பெற்ற கடலூர் மாவட்டத்தில் நிலத்தடியிலும் மற்றும் ஏரிகள், குளங்கள், கால்வாய்களிலும் தூர்வாரும்போது பண்டய கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக விருத்தாசலம் வட்டம் பாலக்கொல்லை, நடியப்பட்டு, ஒடப்பன்குப்பம் போன்ற பகுதிகளில் கூழாங்கற்கள் அதிகம் தென்படுகிறது. மருங்கூரில் சாலையை அகலப்படுத்தும் பணி மேற்கொண்டபோது, சுமார் 2 ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டன.

அண்மையில் சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய பகுதிகளி்ல் ஏரி குளங்களை தூர்வாரும்போது சோழர்காலத்தைச் சேர்ந்த சுடுமண் உறைகிணறுகள், செங்கற் கேணிகள் கண்டறியப்பட்டுள்ளன. செங்குட்டுவன் என்பவரின் முயற்சியால் சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்

கழக வரலாற்றுத்துறை ஆய்வாளர்களால் செங்கற் கேணி மற்றும் சுடுமண் உறை கிணறுகளின் வரலாற்றுப் பின்புலம், அவற்றினுடைய காலம், அவை அமைக்கப்பட்ட விதம்,

என்ன காரணத்துக்காக இப்பகுதியில் அவை அமைக்கப்பட்டன என்பது குறித்து முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் கடலூர் மாவட்டத்தில் கடற்கரை நகரங்களாக விளங்கிய குடிகாடு, காரைகாடு, மணிக்கொல்லை, ஆண்டார்முள்ளிப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் தயாரிக்கப்பட்ட கல் மணிகளுக்காகவே கிரேக்கர்களும் ரோமானியர்களும் கடலூருக்கு வந்து, தங்கள் நாட்டு தங்க நாணயங்களைக் கொடுத்து, இப்பகுதி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட அழகிய வண்ணக் கல்மணிகளை நேரடியாக கொள்முதல் செய்து தங்கள் நாடுகளுக்குக் கொண்டுசென்றார்களாம். இதற்கு ஆதாரமாக இம்மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டைமாநத்தத்தில் கிடைத்த ரோம நாணயங்களைக் குறிப்பிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x