Published : 08 Aug 2016 10:26 AM
Last Updated : 08 Aug 2016 10:26 AM
மாநகர பேருந்துகளில் ஒருநாள் பயணச்சீட்டு பெற இனி அடையாள சான்றிதழ் அவசியம் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முறையாக அறிவிக்காமல் திடீரென அடையாளச் சான்றிதழ் கேட்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். இது தொடர் பாக நடத்துநர்களுக்கும், பயணி களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகம் மூலம் 806 வழித்தடங்களில் 3,700க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் சராசரியாக 50 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். பயணிகளின் வசதிக்காக ரூ.50 கட்டணம் கொண்ட ஒரு நாள் பயணச்சீட்டு மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் வழங்கப்படுகிறது.
இந்த பயணச்சீட்டை காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை பயன்படுத்தலாம். ஒரே நாளில் 3 அல்லது 4 பேருந்துகள் மாறிச் செல்வோர் மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கு இந்த பயணச்சீட்டு பயனுள்ளதாக இருக்கிறது. தினமும் சராசரியாக 5 லட்சம் பேர் இந்த பயணச்சீட்டை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், ஒரு நாள் பயணச்சீட்டு பெற பயணிகள் கட்டாயம் அடையாளச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று முன்தினம் புது உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து நேற்று மாநகர பேருந்துகளில் அடையாளச் சான்றிதழ் இருப்பவர் களுக்கு மட்டுமே ரூ.50 பயணச்சீட்டு வழங்கப்படும் என நடத்துநர்கள் தெரிவித்தனர். இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். பேருந்து நடத்துநருக்கும், பயணிகளுக்கும் இடையே பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக பயணிகள் தரப்பில் கூறும்போது, “அடை யாள சான்று இருந்தால் மட்டுமே ரூ.50 பயணச்சீட்டு வழங்கப்படும் என நடத்துநர்கள் தெரிவிக்கின்றனர். முறையாக எதையும் அறிவிக்காமல் திடீரென அடையாளச் சான்று இருந்தால் தான் ஒருநாள் பயணச்சீட்டு வழங்குவேன் என கூறுவது எந்த விதத்தில் நியாயம்?” என்றனர்.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, “ஒரு நாள் பயணச் சீட்டை தினமும் 5 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். பயணிகள் சிலர் பயணம் செய்து விட்டு, வேறொருவரிடமும் அந்த பயணச் சீட்டை கொடுத்து விடுகிறார்கள். எனவே, உண்மையான பயணி கள் பயணம் செய்வதை உறுதிப் படுத்தும் வகையில் ஏதாவது, ஒரு அடையாளச் சான்று கேட்கப்படுகிறது. இதன்மூலம் முறைகேடுகளை தடுக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT