Published : 26 Jul 2016 12:27 PM
Last Updated : 26 Jul 2016 12:27 PM
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து திருப்பூர் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்தும், பிரேமலதாவும் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் அவர்கள் இருவருமே தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர் ஆர்.சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை விஜயகாந்த், பிரேமலதாவுக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி அலமேலு நடராஜன், விஜயகாந்த், பிரேமலதாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கில் தொடர்ந்து ஆஜராகாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணை வரும் 8.8.2016-க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT