Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM
சென்னை கடற்கரை சாலையில் நிறுவப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
மெரினா கடற்கரை சாலையில் நிறுவப்பட்டுள்ள சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக போக்குவரத்து காவல் துறையினர் அறிக்கை அளித்துள்ளதால், அந்த சிலையை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கு இரண்டு வார காலம் இடைக்காலத் தடை விதிக்கக் கோரி நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் வெள்ளிக்கிழமை இந்த முறையீட்டை முன்வைத்தார்.
எனினும் இடைக்காலத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். உத்தரவை செயல்படுத்த இடைக்காலத் தடை விதிப்பதற்கான சரியான காரணம் எதுவும் இல்லை. ஆகவே, இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சிவாஜி சிலையை அகற்றுவது தொடர் பான உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை சாலையில் தமிழக சட்டப்பேரவை வைர விழா நினைவு வளைவு அமைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். ஆகவே, அந்த வளைவு அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சிவாஜி சிலையால் போக்கு வரத்துக்கு இடையூறு என்று கூறுவது சரியல்ல. ஆகவே, இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் பேரவையின் தலைவர் சந்திரசேகரன் கோரியுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT