Published : 18 Jan 2014 09:45 AM
Last Updated : 18 Jan 2014 09:45 AM

சென்னை மாநகர பஸ்களில் காணும் பொங்கல் வசூல் ரூ.3 கோடி

காணும் பொங்கலன்று மெரினா கடற்கரை, வண்டலூர், பூங்கா, மாமல்லபுரம் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு இயக்கப்பட்ட மாநகர பஸ்கள் மூலம் ஒரே நாளில் 3 கோடியே 8 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது.

குறிப்பாக மெரினா கடற்கரை, தீவுத்திடல் பொருட்காட்சி, வண்டலூர் பூங்காவிற்கு மட்டுமே சுமார் 3 லட்சம் பேர் சென்றனர். இது தவிர மாமல்லபுரம், கிண்டி சிறுவர் பூங்கா, புத்தகக் காட்சி ஆகிய இடங் களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. மக்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலம் வழக்கத்தை விட, கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், காணும் பொங்கலன்று மட்டுமே 3 கோடியே 8 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது.

இது குறித்து போக்குரவத்து துறையின் அதிகாரிகள் கூறியதாவது:

பொங்கல் பண்டிகைக்காக கடந்த 11-ம் தேதி முதலே தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே, கோயம்பேடு, தாம்பரம், கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 250க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்கினோம். காணும் பொங்கலன்று மெரினா கடற்கரை, பொருட்காட்சி, புத்தககாட்சி, பெசன்ட்நகர் கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களை இணைக்கும் வகையில் கூடுதலாக சிறப்பு பஸ்ளை இயக்கினோம். காணும் பொங்கலன்று மட்டுமே மொத்தம் 3,640 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், ஒரே நாளில் 3 கோடியே 8 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது. இதுவே கடந்த ஆண்டு காணும் பொங்கலில் 3 கோடியே 5 ஆயிரம் ரூபாய் வசூலாலனது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒரு நாள் டிக்கெட் 50% அதிகரிப்பு:

மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் இயக்கப்படும் ஏ.சி பஸ்களை தவிர, மற்ற பஸ்களில் மக்கள் பயணம் செய்யும் வகையில் 50 ரூபாயில் ஒரு நாள் டிக்கெட் வழங்கப்படுகிறது. அந்த வகையில், காணும் பொங்கலன்று மட்டுமே 78,509 ஒரு நாள் டிக்கெட்(ரூ.50) விற்பனை ஆகியுள்ளது. இது வழக்கமான நாட்களை காட்டிலும் 50 சதவீதம் அதிகமாகும். கடந்த காணும் பொங்கலன்று 71,668 டிக்கெட் விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x