Published : 16 Feb 2014 03:37 PM
Last Updated : 16 Feb 2014 03:37 PM

தென்னக மக்களிடம் பாகுபாடு காட்டுகிறது மத்திய அரசு: திமுக

தென்னக மக்களிடம் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக திருச்சி மாநாட்டில் குற்றம்சாட்டியுள்ள திமுக, அரசிக்கான சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும், இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சியில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வரும் திமுக 10-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:

சேது சமுத்திரத் திட்டம்

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பாக, திட்டப்பணிகள் தொடங்குவதற்குச் சாதகமாக பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி முடித்து, சேது சமுத்திரத் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கிட இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி, தென்னக வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டும்.

கச்சத்தீவு பிரச்சினை

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பது கண்டனத்துக்கு உரியது.

ஈழத் தமிழர் பிரச்சினை

வருகின்ற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசின் நோக்கத்திற்கு எவ்விதத்திலும் துணை போகாமல், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழிய உள்ள தீர்மானத்தை ஆதரிப்பதோடு; சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்றும், ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்றும்; இந்திய அரசே தனியாகவும் ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன்மொழிந்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது.

நதிகள் தேசிய மயமும் இணைப்பும்

2002 ஆம் ஆண்டில் இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நதிநீர் தேசிய மயம் - நதிநீர் இணைப்பு தொடர்பான பொதுநல வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினைத் தொடர்ந்து, இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும், தேசிய மயமாக்கி இந்தியாவின் வடபாகத்தில் உள்ள கங்கை - மகாநதியை தென் பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் கிருஷ்ணா, பெண்ணாறு, காவேரி, வைகை, தாமிரபரணி, நெய்யாறு ஆகிய நதிகளுடன் இணைத்திட வேண்டுமென்றும், கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கி பாய்ந்து, அரபிக் கடலில் வீணாகும் அச்சங்கோவில் - பம்பா நதிகளை தமிழ்நாட்டோடு இணைத்திட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளுக்கு வடிவம் கொடுப்பதற்கும் நிறைவேற்ற வழிவகைகள் காண்பதற்கும், நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்றை உருவாக்கி அதற்குரிய திட்டச் செலவையும் ஒதுக்கீடு செய்து, இந்தியாவில் கிடைத்திடும் முழு அளவு நீரின் பயன்பாட்டை உயர்த்தி, உரிய நீர் மேலாண்மை மூலம் இந்திய வேளாண்மையின் தரத்தையும் உற்பத்தியையும் அதிகரித்து வேளாண் பெருங்குடி மக்களைக் காப்பாற்றவும், அனைத்துப் பகுதிகளிலும் குடி நீர்த் தேவையை முழுமையாக நிறைவு செய்திடவும் போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் இறங்குமானால், சில்லறை வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்திற்கும், அதையே நம்பியிருக்கும் பல கோடி பேர், தத்தளிக்கக்கூடிய நிலைமை உருவாகும் என்பதை உணர்ந்து, சில்லரை வணிகத்தில், அந்நிய முதலீடு என்பதை மத்திய அரசு முற்றிலும் தடுத்திட வேண்டும்.

தூக்குத் தண்டனையை ரத்து செய்க

மனித நேயம் மற்றும் மனித உரிமை அடிப்படையில், உலக நாடுகளில், 140 நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்துள்ளன. ஆனால் இந்தியாவில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமென, வேண்டுகோள்களும், விமர்சனங்களும் நாள் தோறும் பத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தாலும், இன்னும் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படவில்லை; ரத்து செய்வதற்கான எந்தச் சட்டத்தையும் நிறைவேற்ற மத்திய அரசு இதுவரையில் முன் வரவில்லை.

தூக்குத் தண்டனையின் மூலம் மனித உயிர்களை மனிதாபிமானமற்ற முறையில், முடித்து வைக்க முடியுமே தவிர, குற்றங்களை ஒழிக்கவோ குறைக்கவோ இயலாது. குற்றங்கள் ஒழிக்கப்படுவதற்கு மனமாற்றங்கள் தேவை. அதற்குத் தூக்குத் தண்டனை உரிய தீர்வாகாது. எனவே மத்திய அரசு இதை ஆழ்ந்து பரிசீலித்து தூக்குத் தண்டனையை அறவே ரத்து செய்ய மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர முன் வர வேண்டும்.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போதிலும், இதுவரை அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகள் காவிரி நதிநீரை, விவசாயத்திற்குத் தேவையான அளவு, உரிய காலத்தில் பயன்படுத்த முடியாத சூழ்நிலை தொடர்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை சட்டப்படி நிறைவேற்ற அமைக்க வேண்டிய காவிரி - மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு இவைகளை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

விலைவாசி உயர்வு

அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வு என்பது தமிழ்நாட்டு மக்களை பெரிதும் பாதித்துள்ளது. மாதந்தோறும் நிகழ்ந்து வரும் விலை ஏற்றத்தால் ஏழையெளிய, நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இத்தகையோரின் வருவாயையும், வாங்கும் சக்தியையும் கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி மக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்துவதற்கான வழிவகை காணத் தவறியதற்காக, மத்திய, மாநில அரசுகளுக்கு இம்மாநில மாநாடு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

கல்விக் கடன்களை தள்ளுபடி செய்க!

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், கல்விக் கடன் பெற்று, தங்கள் படிப்பை நிறைவு செய்துள்ளனர்; பலர் படிப்பைத் தொடர்ந்து வருகின்றனர். கல்வி நிலையங்களில் தங்கள் படிப்பை முடித்த மாணவர்களுக்கு, உடனடியாக வேலை கிடைக்காத நிலையில் அவர்கள் பெற்ற கல்விக் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வங்கிகள் கடன் பெற்ற மாணவர்களின் குடும்பங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

மேலும், கடன் பெற்ற மாணவ - மாணவியரின் விவரங்களை பொது அறிவிப்பாகவும், வங்கிகள் வெளியிடுகின்றன. இதனால், மாணவர்களும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் மனரீதியாக பெரிதும் பாதிப்படைந்து சோர்வுற்றுள்ளனர். வங்கிகள் கடைப்பிடிக்கும் இத்தகைய மனிதாபிமானமற்ற அணுகுமுறையினை வங்கிகள் மாற்றிக் கொள்ள வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்வதோடு, வங்கிகள் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு வழி வகை காண வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை

மத்திய அரசே இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களை பாதுகாப்பதற்குரிய விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நெசவாளர் துயர் துடைத்திடுக

தற்போதைய ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு, நெசவுத் தொழிலை நசுக்கி - நெசவாளர்களை நலிவடையச் செய்திடும் வகையில், அவர்களிடமிருந்து பன்மடங்கு நிலையான மின்கட்டணம் மற்றும் அதற்குரிய வரி ஆகியவற்றை வசூலித்து அவர்களை வேதனைக்குள்ளாக்கி வருவதை இம்மாநில மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

நெல்லுக்கும், கரும்புக்கும், தேயிலைக்கும் உரிய விலை

நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 2,000 ரூபாய் என்று நிர்ணயித்து வழங்கிட தமிழக அரசு முன் வர வேண்டும். கரும்பு கொள்முதல் விலையை குறைந்த பட்சம் டன் ஒன்றுக்கு 3,500 ரூபாயாவது வழங்கிட இந்த அரசு முன் வர வேண்டும். 1 கிலோ பச்சைத் தேயிலைக்கு ரூபாய் 25 என கொள்முதல் விலை நிர்ணயம் செய்திட வேண்டும்.

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி

தி.மு. கழக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதால், மக்கள் நலப் பணியாளர்கள் மீது அ.தி.மு.க. அரசு கொண்டிருக்கும் பழி வாங்கும் போக்கை கைவிட்டு உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்கும்வரை காத்திருக்காமல், மக்கள் நலப் பணியாளர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் காப்பாற்றிடத் தாமாகவே முன் வரவேண்டும்.

கோதுமைக்கு உள்ள சலுகை, அரிசிக்கு ஏன் இல்லை?

மத்திய நிதித்துறை அமைச்சகம் கடந்த 27-12-2013 அன்று 'நிதிச்சட்டம் பிரிவு 65 (பி) எஸ்' என்றொரு புதிய சட்டப் பிரிவை உருவாக்கியது. அதில் அரிசி வேளாண் விளைபொருள் இல்லை என்பதால், மத்திய, மாநில அரசுக் கிடங்குகளில் அரிசியை இருப்பு வைத்திருந்தால், இருப்பு வைக்கப்படும் அரிசிக்கு கிட்டங்கிகளுக்கான மாத வாடகையோடு, சேவை வரியும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் முன் தேதியிட்டு 1-7-2012இல் இருந்தே அமலுக்கு வருகிறது என்று கூறி 18 மாதங்களுக்கு உண்டான சேவை வரியையும் சேர்த்துக் கட்ட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரிசிக்குச் சேவை வரி விதித்தது போலவே பருத்திக்கும் மத்திய அரசு இந்தச் சட்டத்தின் மூலம் சேவை வரி விதித்துள்ளது. அரிசிக்கும், பருத்திக்கும் சேவை வரி விதித்துள்ள மத்திய அரசு கோதுமைக்கு மட்டும் சேவை வரியிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது.

மத்திய அரசு கோதுமையை அடிப்படை உணவாகக் கொள்ளும் வட மாநிலங்களைச் சார்ந்த மக்களுக்கு ஒரு நீதி, அரிசியை அடிப்படை உணவாகக் கொண்டிருக்கும் தென்னக மக்களுக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு காட்டாமல், அனைவருக்கும் சமநீதி வழங்கக்கூடிய வகையில் அரிசிக்கு மட்டும், விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியையும், ஏற்கனவே பஞ்சாலைத் தொழில் நலிந்த காரணத்தால் அவதிப்படும் நெசவாளர்களை மேலும் பாதித்திடும் பருத்திக்கான சேவை வரியையும் உடனே ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழக சட்டம் - ஒழுங்கு

தமிழகமே அபாயகரமான பூமியாக மாறி விட்டது. சட்டம் ஒழுங்கு நிலைமை அழுகிப் போய் விட்டதைச் சிறிதும் உணராமல், தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்லிக் கொண்டே ஜெயலலிதா மாய்மாலம் செய்து வருவதை இம்மாநில மாநாடு வன்மையாகக் கண்டிக்கின்றது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x