Published : 07 Jan 2015 01:07 PM
Last Updated : 07 Jan 2015 01:07 PM
தேமுதிக இன்று நிறைவேற்றிய தீர்மானங்களில் மத்திய அரசின் செயல்பாடுகள் மீதான விமர்சனம் எதுவும் இடம்பெறாத நிலையில், பாஜக கூட்டணியில் நீடிக்கவே விஜயகாந்த் விரும்புவதாக கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால், தேமுதிக போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது. ஆனால், போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் 2வது இடத்தை பிடித்திருந்தது.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேமுதிக தலைமையில் கூட்டணி அமையும் என ஏற்கனவே பாஜகவுக்கு நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், இப்போது, அக்கூட்டணியில் இருந்த மதிமுக விலகியுள்ளது. இதையடுத்து, பாமகவின் நிலையை இன்னும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே சமீபத்தில் சென்னைக்கு வந்த பா.ஜக தேசிய தலைவர் அமித்ஷாவை அன்புமணி, ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் மட்டும் சந்தித்தனர். தேமுதிக விஜயகாந்த் அவரை சந்திக்கவில்லை. தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து, முதல்வர் வேட்பாளரை அறிவித்து போட்டியிடுவோம் என்று அமித்ஷா பேசியிருப்பது, தேமுதிக மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று கோவையில் தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்ட தீர்மானங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகளை தேமுதிக துளியும் விமர்சிக்கவில்லை. இதனால், கூட்டணியில் நீடிக்கவே தேமுதிக விரும்புவதாக கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT