Published : 10 Dec 2013 04:18 PM
Last Updated : 10 Dec 2013 04:18 PM

சிங்கப்பூரில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை மத்திய அரசு தடுக்க வேண்டும்: ராமதாஸ்

சிங்கப்பூரில் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வெண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "லிட்டில் இந்தியா பகுதியில் வெடித்த கலவரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிங்கப்பூர் காவல்துறையினர் தமிழகத்தைச் சேர்ந்த பலர் உள்ளிட்ட 25 இந்தியர்களையும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளையும் சோதனையிடும் காவல்துறையினர் அங்கு தமிழர் எவரேனும் இருந்தால் கைது செய்து வருகின்றனர். சட்டத்தை செம்மையாக செயல்படுத்தும் நாடு என்று கூறிக்கொள்ளும் சிங்கப்பூர், சட்டத்திற்கு எதிராக அப்பாவிகளை சிறைபிடிப்பதும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கும் என்று அச்சுறுத்துவதும் கண்டிக்கத்தக்கவை. சிங்கப்பூர் காவல்துறையின் நடவடிக்கைகளால் அங்குள்ள தமிழர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட அஞ்சி வீடுகளுக்குள் பதுங்கிக் கிடக்கின்றனர்.

சிங்கப்பூர், இன்று உலகின் பொருளாதார சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்திருப்பதற்கு தமிழர்களின் கடுமையான உழைப்பு தான் முக்கிய காரணம் ஆகும். அப்படிப்பட்ட தமிழர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவது தமிழினத்தை கடுமையாக அவமதிக்கும் செயலாகும்.

லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கலவரம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒன்றல்ல. தாறுமாறாக ஓடிய பேரூந்து மோதியதால் அப்பாவி தமிழர் ஒருவர் உயிரிழந்ததால் தான் வன்முறை வெடித்தது. சிங்கப்பூரில் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதாலும், பெரும்பான்மையினராக உள்ள சீனர்களின் சீண்டல்களாலும் மனம் புழுங்கிப் போயிருந்த தெற்காசியர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியது தான் கலவரம் வெடிக்கக் காரணம் ஆகும்.

இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு சிங்கப்பூரில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர மீதமுள்ள அனைத்து தமிழர்களையும் விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தாமல், உடனே விடுதலை செய்வதற்கு இந்திய தூதரகம் மூலமாக மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

விபத்தில் உயிரிழந்த தமிழக இளைஞர் சக்திவேல் குமாரவேலுவின் உடலை விரைவாக சொந்த ஊர் கொண்டுவரவும், அவரது குடும்பத்திற்கு போதிய இழப்பீடு பெற்றுத் தரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x