Published : 26 Feb 2017 09:31 AM
Last Updated : 26 Feb 2017 09:31 AM
தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்.
1,000 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் நம் முன்னோரிடம் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப் படுகிறது. காலனி ஆதிக்க காலம் தொடங்கியதில் இருந்து, நமது பாரம்பரிய நெல் வகைகள் படிப் படியாக மறைந்தன. குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால்தான் பாரம்பரிய நெல் ரகங்கள் பெருமளவு அழிந்ததாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழலில்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப் போற்றப்பட்ட நம்மாழ்வாரின் இயக்கத்தில் இணைந்திருந்த ‘நெல்’ ஜெயராமன், பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் பணியைத் தொடங்கினார்.
அச்சக தொழிலாளி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். திருத்துறைப்பூண்டியில் தொழிலாளியாக வேலை செய்தார். நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003-ல் பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார். அந்தப் பயணத்தின்போது, காட்டுயாணம் உட்பட 7 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை சில விவசாயிகள் நம்மாழ்வாரிடம் வழங்கினர். அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார், அவற்றை மறுஉற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதுமுதல் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, அவற்றை மீட்டெடுக்கும் நெடும் பயணத்தை நெல் ஜெயராமன் தொடங்கினார். இதுவரை 169 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார். திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் மையத்தையும் உருவாக்கியுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் நரசிம்மன் என்பவர் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில், நெல் ஜெயராமனால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாரம்பரிய நெல் மையம், இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் மிகச் சிறந்த ஆய்வு மையமாக திகழ்கிறது.
பாரம்பரிய நெல் திருவிழா
ஆதிரெங்கத்தில் ஆண்டுதோறும் மே கடைசி வாரத்தில் பாரம்பரிய நெல் திருவிழாவை ஜெயராமன் கடந்த 2006 முதல் நடத்துகிறார். தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் இதில் பங்கேற்கின்றனர். இதில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் 2 கிலோ பாரம்பரிய நெல் விதை இலவசமாக வழங்கப்படுகிறது. அதை அவர்கள் தங்கள் வயல்களில் விளைவித்து, அவரவர் பகுதிகளில் அவற்றை பரவச் செய்ய வேண்டும். மீண்டும் அடுத்த ஆண்டு நெல் திரு விழாவுக்கு வரும்போது 4 கிலோ விதையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த நிபந்தனையுடன் நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளால் 169 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், தற்போது தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டு நெல் திருவிழாவில் 4,500 பேர் பங்கேற்றனர். தகவல் தொழில்நுட்பத் துறை உட்பட பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றது இத்திருவிழாவின் வெற்றியை பறைசாற்றியது.
ஜெயராமனின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், தேசிய அடிப்படை நிலை கண்டுபிடிப்பு - பாரம்பரிய அறிவுக்கான விருதையும், SRISTI அமைப்பின் இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான SRISTI சம்மான் விருதையும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி கவுரவித்துள்ளது. கொடுத்த பணியை சிறப்பாகச் செய்ததால், ஜெயராமனாக இருந்த அவருக்கு ‘நெல்’ ஜெயராமன் என பெயர் சூட்டினார் நம்மாழ்வார்.
புற்றுநோய் பாதிப்பு
இத்தகைய உன்னதமான பணிகளைச் செய்துவரும் ‘நெல்’ ஜெயராமன், தற்போது கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். வரும் மே மாதம் நடக்கவுள்ள நெல் திருவிழாவுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, புற்றுநோய் பாதிப்பு குறித்து தெரியவந்தது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நண்பர்களின் உதவியோடு தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது சிகிச்சைக்காக அடுத்த சில வாரங்களுக்கு மட்டும் ரூ.15 லட்சத்துக்கு மேல் தேவைப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும், உடல்நல பாதிப்பை பொருட்படுத்தாமல், நலம் விசாரிக்க வரும் நண்பர்களிடம் எப்போதும்போல, பாரம்பரிய நெல் வகைகளை பரவலாக்குவதற்கான அடுத்தகட்ட பணிகள் பற்றி உற்சாகமாகப் பேசி வருகிறார் ‘நெல்’ ஜெயராமன்.
தொடர்புக்கு: 9952787998
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT