Published : 22 Jun 2016 07:33 PM
Last Updated : 22 Jun 2016 07:33 PM
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிகள் மீதான பாலியல் சீண்டல் மேல்முறையீட்டு வழக்கை பல்கலைக்கழகம் இன்று திரும்பப் பெற்றுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுவை பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவிகளை சீனியர் மாணவர் ஒருவர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் நடந்தது.
இதில் பல்கலைக்கழக நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவிகளையே தண்டித்து இடைநீக்கம் செய்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மாணவிகள் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் மேல்முறையீடு செய்து உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் புதுவை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியிடம் மேல்முறையீடு செய்தனர். பல்கலைக்கழக துணைவேந்தர் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்காமல் அம்மாணவிகள் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தனர் என்ற காரணத்தைக் காட்டி, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.
இதையடுத்து பாலின சமத்துவம் பற்றிய உணர்வற்ற ஆணையை எதிர்த்தும் பல்கலைக்கழக் மானியக்குழு (யுஜிசி) அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு எதிர் நடவடிக்கைகளை ஆவண செய்யும் வகையில் அமைப்புகளை உருவாக்கிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் பாதிக்கப்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் கடந்த 4.12.2014ல் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், பல்கலைக்கழகத்தின் ஆணைகளை ரத்து செய்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்ந்து கல்வி பயில உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி அவர்கள் செமஸ்டர் தேர்வு எழுதுவதற்கு ஆவண செய்ய வேண்டும். இப்பிரச்சனையை முறையாக கையாளாகாமல் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பு ஏற்படுத்திய காரணத்துக்காக புதுவை பல்கலைக்கழகத்துக்கு ரூ.20000 அபராதம் விதிக்கப்பட்டது..
அதையடுத்து பல்கலைக்கழக தரப்பில் அப்போது மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து கட்டாய விடுப்பில் செல்ல துணைவேந்தர் சந்திராவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பேரவையும், மாணவிகள் பாலியல் சீண்டல் தொடர்பான வழக்கில் முன்னாள் துணைவேந்தரின் பழிவாங்கும் நடவடிக்கையால் பல்கலைக்கழக நிர்வாகம் மேல்முறையீட்டுக்கு சென்றது. ஆகவே பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நேர்ந்த அநீதிக்கு பல்கலைக்கழக புதிய நிர்வாகம் பொறுப்பேற்று மேல்முறையீட்டு வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழக புதிய நிர்வாகம் மாணவிகள் மீது தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை இன்று திரும்பப்பெற்றது
இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்க செயலர் ஆனந்த் கூறுகையில், " கடந்த . 3 ஆண்டுகளாக பாலியல் சீண்டலுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்திய மாணவிகளுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு பல்கலைக்கழகம் காலம் கடந்து எடுத்த முடிவாக இருந்தாலும் இது வரவேற்புக்குரியது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT