Published : 30 Nov 2013 12:00 AM
Last Updated : 30 Nov 2013 12:00 AM
விபத்தில் சிக்கி பரிதவித்த பெண் ஒருவரின் அவலநிலைக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 23-ம் தேதி நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. அதாவது ரூ.45 லட்சம் இழப்பீட்டுடன் 7.5 சதவீத வட்டியும் சேர்த்து காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என முடிவானது. இதன்படி அவரது குடும்பத்துக்கு ரூ.64.54 லட்சத்துக்கான காசோலை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றியவர் தேவி. கடந்த 4.7.2004 அன்று தனது சகோதரருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது லாரி ஒன்று மோதியதால் படுகாயமடைந்தார்.
இந்த விபத்தினால் இடுப்புக்கு கீழே உடல் பாகங்கள் செயலிழந்து விட்டன. படுத்த படுக்கையாகவே உள்ளார். இயற்கையான முறையில் மலம் கழிக்க இயலாது. மற்றவர்கள் உதவியின்றி தனது அன்றாட பணிகளை செய்ய முடியாத நிலை.
விபத்தினால் தனக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு, மருத்துவச் செலவு, எதிர்கால மருத்துவச் செலவு, திருமணம் செய்ய முடியாத நிலை, மன உளைச்சல் போன்றவற்றுக்காக ரூ.1 கோடி இழப்பீடு தர வேண்டும் என கோரி ஸ்ரீதேவி வழக்கு தொடர்ந்தார்.
எனினும் விபத்துக்கு காரணமான லாரியை காப்பீடு செய்திருந்த காப்பீட்டு நிறுவனம் அவ்வளவு தொகையை வழங்க மறுத்து விட்டது. மோட்டார் வாகன விபத்து உரிமம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம், தேவிக்கு ரூ.52 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.
எனினும் இந்தத் தீர்ப்பை ஏற்காதஸ்ரீதேவி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதேபோல் இழப்பீட்டுத் தொகையைக் குறைக்கக் கோரி காப்பீட்டு நிறுவனமும் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான மெகா லோக் அதாலத்தின்போது (மக்கள் நீதிமன்றம்) இந்த வழக்கும் சென்னையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக தூக்குப் படுக்கை (ஸ்ட்ரெச்சர்) மூலம்ஸ்ரீதேவியை அழைத்து வந்திருந்தனர். உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன், வழக்கறிஞர்கள் டி.சீமாதுரை, நர்மதா சம்பத் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.ஸ்ரீதேவி தரப்பிலும், காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும் ஒரே இடத்தில் அமர்ந்து, மனம் விட்டு பேசியதால் சுமுகமான தீர்வு ஏற்பட்டது.
இதன்படிஸ்ரீதேவிக்கு ரூ.45 லட்சம் இழப்பீட்டை 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என முடிவாயிற்று.
இதன்படி ரூ.64 லட்சத்து 54 ஆயிரத்து 244-க்கான காசோலை, ஸ்ரீதேவி குடும்பத்தினரிடம் உயர் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இது குறித்து வழக்கறிஞர் நர்மதா சம்பத் கூறியதாவது:
லோக் அதாலத் விசாரணையின்போது வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அருகருகே அமர்ந்து மனம் விட்டுப் பேச வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் பிரச்னையின் உண்மை நிலையை புரிந்து கொள்கின்றனர். அவரவர் நிலையிலிருந்து இறங்கி வந்து, விட்டுக் கொடுப்பதால் சுமூக தீர்வு ஏற்படுகிறது.
மேலும், லோக் அதாலத்துக்கு வருவதால் வழக்குச் செலவு எதுவும் இல்லை. சகல தரப்பினரின் ஒருமித்த முடிவால் தீர்வு ஏற்படுவதால் யாருக்கும் வெற்றி, தோல்வி கிடையாது. லோக் அதாலத் முடிவின் மீது மேல்முறையீடு கிடையாது. தீர்ப்பின் நகலும், தீர்ப்பின் பலன்களும் உடனடியாக கிடைத்து விடும். ஆகவே, சட்டத்தினால் தீர்க்கப்படக் கூடிய எந்தவொரு பிரச்சினையையும் சுமுகமாகவும், உடனடியாகவும் தீர்த்துக் கொள்ள அனைவரும் லோக் அதாலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் நர்மதா சம்பத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT