Published : 16 Jun 2017 09:09 PM
Last Updated : 16 Jun 2017 09:09 PM
மாநில அரசின் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் ஆளுநர் புதுவையை விட்டு சென்று விடலாம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேட்டியைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் இன்று மாலைமுதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''நிகர்நிலைப் பல்கலைக்கழக கட்டணம் தொடர்பாக தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதில் புதுச்சேரி மாநில அரசும் தெளிவாக மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
இக்கல்விக் கட்டணத்தை பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் மத்திய அரசும் தான் நிர்ணயிக்க வேண்டும் என தெளிவாகத் தெரிவித்துள்ளோம். புதுவை மாநிலத்துக்கு இதில் எந்த அதிகாரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளோம்.
கடந்த 30-ம் தேதி ஆளுநர் வெளியிட்ட கடிதத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களுக்கு கட்டணத்தை மாநில அரசு நிர்ணயிக்குமாறு தெரிவித்திருந்தார். ஆனால் தற்போதைய உயர் நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி.
புதுவை அரசுக்கு அதிகாரமில்லை என தீர்ப்பில் கூறியுள்ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவைதான் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்டாக் முறையாக செயல்படவில்லை என தீர்ப்பில் குறிப்பிடவில்லை. இந்நிலையில் சென்டாக் கமிட்டியை மாற்ற வேணடும் என ஆளுநர் கூறுவதற்கு என்ன காரணம்?
22 மாணவர்களை நிகர்நிலைப் பல்கலைகழங்களுக்கு அழைத்துச்சென்று ரூ.5.5 லட்சம் கட்டணத்தில் சேர்ப்பதாக அழைத்துச் சென்றார். ஆனால் பின்னர் நீதிமன்றத்தைத்தான் நாடினார். தற்போது இடைக்கால கட்டணம் ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 4-வது பிரதிவாதியாக ஆளுநர் செயலர் சேர்க்கப்பட்டுளளார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்புக்கு எதிராக அவர்கள் நியமித்த ஆளுநர் எவ்வாறு எதிராக செயல்பட முடியும். சென்டாக் சேர்க்கையில் அரசு முறைகேடு புரிந்ததாக ஆளுநர் நிருபீக்க முடியுமா?
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்டாக் அமைப்புக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் சுயவிளம்பரத்துக்காகவும், அரசுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்றநோக்கில் செயல்படுகிறார்.
ஆளுநர் பதவி புனிதமான பதவியாகும். ஆனால், கிரண்பேடி தொண்டு நிறுவன நிர்வாகி போல் செயல்படுகிறார். நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் அதிகாரிகளை அழைத்துப் பேசினேன் இதை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட்டேன். ஒன்றும் இல்லாத பிரச்சினையை ஊதி ஆளுநர் பெரிதாக்கி வருகிறார்.
மாநில அரசின் மீது நம்பிக்கை இல்லா விட்டால் ஆளுநர் புதுவையை விட்டுச் சென்று விடலாம்.
துணைநிலை ஆளுநர் செயலர் மீது நடவடிக்கை கோரி பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். துணைநிலை ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக மத்திய அரசுக்கு 3 மாதங்களுக்கு முன்பே கடிதம் அனுப்பினோம். ஆனால் பதில் இதுவரை வரவில்லை'' என்று நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT