Published : 18 Jan 2014 12:00 AM
Last Updated : 18 Jan 2014 12:00 AM
கரூர் மாவட்டம் கோவிலூரில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடத்தப்பட்ட சேவற்கட்டால் வேடிக்கை பார்க்க வந்தவரும், போட்டியில் ஜாக்கியாக களமிறங்கியவரும் உயிரிழந்த சம்பவத்துக்குக் காரணமான வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பூலாம்வலசு, கோவிலூர் ஆகிய பகுதிகளில் ஜன.13-ம் தேதி தொடங்கி ஜன.16-ம் தேதி வரை சேவற்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்திருந்தது. கோவிலூர் குளக்கரை பகுதியில் ஜன.14-ம் தேதி நடந்த சேவற்கட்டை வேடிக்கை பார்த்த திருப்பூர் வளைங்காடு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (35), கோவிலூர் சிவன் கோயில் பகுதியில் ஜன.15-ம் தேதி நடந்த சேவற்கட்டில் ஜாக்கியாக சேவலைக் களமிறக்கிய ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பாலாஜி ஆகியோர் சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி குத்தியதில் உயிரிழந்தனர்.
சேவற்கட்டுக்குத் தடை
இதையடுத்து ஜன.16-ம் தேதி கரூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இடங்களில் சேவற்கட்டு ரத்து செய்யப்பட்டதுடன், மாவட்டத்தில் எந்த பகுதியிலும் சேவற் சண்டை நடத்த தடை விதிக்கப்பட்டது. மீறி நடத்தப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ச.ஜெயந்தி எச்சரித்துள்ளார்.
இருவர் கைது
குளித்தலை அருகேயுள்ள இரும்பூதிப்பட்டியில் அனுமதி யின்றி சேவல் சண்டை நடத்திய இருவரை குளித்தலை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்ததுடன், தலைமறைவான 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்துவோர் மீது போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வழக்குப்பதிந்து கைது செய்து வருகின்றனர்.
அனுமதிப்பது மாவட்ட நிர்வாகம்
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு நடைபெற்ற சேவற்கட்டில் இருவர் உயிரிழந்தது குறித்து காவல் கண்காணிப்பாளர் ஜோஷி நிர்மல்குமாரிடம் கேட்டபோது, “சேவற்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வகுத்து அனுமதி வழங்குகிறது” என்றார். அனுமதி வழங்குவதற்கு முன் அப்பகுதியில் சேவற்கட்டு பாரம்பரியமாக நடத்தப்படுகிறதா? இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமா? என மட்டுமே காவல்துறையிடம் கேட்கப்படுகிறது என்கின்றனர் காவல் துறையினர்.
பின்பற்றப்படாத விதிமுறைகள்
சேவல் சண்டையில் சூதாட்டம் இருக்கக்கூடாது, கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது, கால்நடைத் துறை மருத்துவரிடம் பதிவு செய்த பின்பே சேவல்களை சண்டையில் பங்கேற்கச் செய்யவேண்டும். சண்டை முடிந்த பிறகு சேவல்களை கால்நடை துறை மருத்துவர் பரிசோதித்து சான்றிதழ் அளிக்கவேண்டும்.
விதிமுறைகளை மீறமாட்டேன் என நிகழ்ச்சியை நடத்துபவர் உத்திரவாத பத்திரம் (அபிடவிட்) அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளின் அடிப்படையில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.
இத்தகைய விதிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் கோவிலூர் சேவற்கட்டில் விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டதால், இருவர் பலியான சோகம் நேர்ந்துள்ளது. இது சேவற்கட்டில் சேவலின் கால்களில் கட்டப்படும் கத்திகளில் விஷம் தடவப்படுவதாகப் பரவலாகக் கூறப்படுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பரிசோதனைக்கு உடலுறுப்புகள்…
ஈரோடு கருங்கல்பாளை யத்தைச் சேர்ந்த பாலாஜியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் கேட்டபோது, “மரணத்தின் காரணம் குறித்து அறிவதற்காக உடல் உள்ளுறுப்புகள் விஸ்ரா பரிசோதனைக்காக திருச்சி தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சோதனை முடிவுகள் வெளியான பிறகே மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவாக அறியமுடியும்” என்றார்.
திருப்பூர் சசிகுமாரின் உடலுறுப்புகளும் பரிசோதனை க்காக கோவைக்கு அனுப்பப் பட்டுள்ளன. சோதனை முடிவுக்குப் பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும்.
கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள்…
கோவிலூரில் சேவற்கட்டை பொறுப்பேற்று நடத்தியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, விதிமுறைகள் பின்பற்றப்படாததைக் கண்காணி க்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT