Published : 03 Feb 2014 07:46 PM
Last Updated : 03 Feb 2014 07:46 PM

தமிழகத்தில் விரைவில் மின் வெட்டு இல்லாத நிலை: முதல்வர் உறுதி

தாம் ஏற்கெனவே உறுதி அளித்தபடி, மின் வெட்டே இல்லை என்ற நிலைமையை தமிழகம் விரைவில் எட்டிவிடும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இது குறித்து சட்டப்பேரவையில் இன்று ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:

"மின்சாரத்தை எடுத்துக் கொண்டால், பல தடைகளை தகர்த்தெறிந்து, கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில், எனது தலைமையிலான அரசு எடுத்த பகீரத முயற்சிகளின் காரணமாக, இருளில் மூழ்கியிருந்த தமிழகம் வெளிச்சத்திற்கு வரத் துவங்கியுள்ளது.

1991 முதல், 1996 வரையிலான எனது முதல் ஆட்சிக் காலத்தில், கிட்டத்தட்ட 1,300 மெகாவாட் மின் நிறுவு திறன் கூடுதலாக சேர்க்கப்பட்டது. 2001 முதல் 2006 வரையிலான எனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில், 2,500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின் நிறுவு திறன் சேர்க்கப்பட்டது.

தற்போது மூன்றாவது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தேவைக்கேற்ப மின் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை நான் முனைப்புடன் எடுத்து வருகிறேன்.

மேட்டூர் அனல் மின் திட்ட மூன்றாம் அலகிலிருந்து 600 மெகாவாட், வல்லூர் கூட்டு மின் திட்டத்தின் இரு அலகுகளிலிருந்து 700 மெகாவாட், வட சென்னை அனல் மின் திட்டத்தின் இரு அலகுகளிலிருந்து 1,200 மெகாவாட் என கிட்டத்தட்ட 2,500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதாவது 8,000 மெகாவாட், 9,000 மெகாவாட் என இருந்த மின் உற்பத்தி, இதுவரை இல்லாத அளவுக்கு 29.1.2014 அன்று 12,799 மெகாவாட்டை எட்டி சாதனை படைத்துள்ளது என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதி மீது சாடல்

கடந்த சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரின் போது புதிய மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் கூடுதலாக 1,700 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைத்து வருகிறது என்று நான் தெரிவித்தேன். உடனே தி.மு.க. தலைவர் கருணாநிதி, "இந்த 1,700 மெகாவாட் மின்சாரம் முழுவதும் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களின் மூலம் கிடைத்தது தான்" என்று தெரிவித்து சாதனையில் பங்கு போட முயற்சி செய்தார்.

இதனையடுத்து ஒரு சில நாட்களிலேயே தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் ஒப்படைக்கப்படாத புதிய கூட்டு மின் திட்டங்கள் உட்பட மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டு வந்த மின் உற்பத்தி சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு குறைந்தது. மீண்டும் மின்வெட்டின் நடைமுறைப்படுத்தும் சூழ்நிலைக்கு எனது அரசு தள்ளப்பட்டது.

இவற்றைச் சுட்டிக் காட்டி பிரதமருக்கு நான் 25.11.2013 அன்று கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் தேசிய அனல் மின் கழகத்தின் கீழுள்ள கூட்டு நிறுவனம் உள்ளிட்ட மத்திய மின் உற்பத்தி நிலையங்களும், பாரத மிகுமின் நிறுவனத்தால் சோதனை

அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் மின் உற்பத்தி நிறுவனங்களும் ஒரே சமயத்தில் இவ்வளவு மோசமாக செயல்படுவதை தமிழக மக்களால் நம்ப முடியவில்லை.

மத்திய அரசின் கீழுள்ள பொதுத் துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களில் 2,500 மெகாவாட் அளவுக்கு உற்பத்தி குறைந்து இருப்பது தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்யும் செயல் திட்டமிட்ட சதி என்று தமிழக மக்கள் நம்பும் நிலைக்கு கொண்டு சென்று விடும் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, "இதைப் பற்றிய குற்றச்சாட்டினை தமிழக முதல் அமைச்சரே, பிரதம அமைச்சருக்கு கடிதம் மூலமாக எழுதியிருக்கிறார். அதற்கு பிரதமரின் பதில் வந்த பிறகு, அந்த விவரத்தை அறிந்து நான் விளக்கம் அளிக்கின்றேன்" என்று கூறினார்.

பின்னர், ஓரிரு நாட்களிலேயே பிரதமரிடம் இருந்து எவ்வித பதிலும் வரப் பெறாமலேயே மத்திய மின் தொகுப்பிலிருந்து வரும் மின்சாரம் ஏன் குறைந்துள்ளது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

அதன் பின்னர், பிரதமர் தனது 16.12.2013 நாளிட்டக் கடிதத்தில், மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் என்ன காரணங்களினால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து, 'தமிழ்நாட்டில் மின்சார துறையில் ஒரே சமயத்தில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்துள்ளது யதேச்சையாக ஏற்பட்டது. இருப்பினும், விரைவில் அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்துள்ளார். இதற்கு என்ன பொருள் என்பதை உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களின் முடிவிற்கே நான் விட்டுவிடுகிறேன்.

சற்று முன் தெரிவித்ததை போல், 2,500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் தற்போது நமக்கு கிடைத்து வருகிறது. இதுதவிர, 3,330 மெகாவாட் அளவு மின்சாரத்தை 15 ஆண்டுகளுக்கு பெறத் தக்க வகையில், நீண்டகால அடிப்படையில் கொள்முதல் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில் 74 மெகாவாட், தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு தனியார் மின் நிலையத்திலிருந்து 1.1.2014 முதல் பெறப்பட்டு வருகிறது.

மேலும், 1098 மெகாவாட் மின்சாரம் தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிறுவப்பட்டு வரும் தனியார் மின் நிலையங்களில் இருந்து, 2014-2015-ல் பெறப்படும். மீதமுள்ள 2,158 மெகாவாட் மின்சாரம், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும், மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள தனியார் மின் நிலையங்களில் இருந்து பெறப்படும்.

தற்போது, பரிசோதனையில் உள்ள சோலாப்பூர் - ரெய்ச்சூர் மின் வழித்தடம் வணிக உபயோகத்திற்கு விரைவில் கொண்டு வரப்படும் போது, வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து 1,426 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கும்.

கூடங்குளம் அணு மின் திட்டம்

எனது தலைமையிலான அரசின் தொடர் முயற்சி காரணமாக, கூடங்குளம் அணுமின் திட்டமும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் இந்தத் திட்டம், தனது முழு உற்பத்தி திறனையும் எட்டும் நிலையில் உள்ளது.

இதுமட்டுமல்லாமல். எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு 3,300 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் திட்டங்களுக்கு சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பெறப்பட்டு உள்ளன. இவை வெகு விரைவில் இறுதி செய்யப்படும். 2,000 மெகாவாட் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டத்திற்கான தொடக்க ஆய்வுப் பணிகள் முடிவு பெற்றுள்ளன. விரைவில் முதற்கட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் எடுத்துக் கொள்ளப்படும்.

5000 கோடி ரூபாய் முதலீட்டில். 3572 கோடி ரூபாய் ஜப்பானிய நிதி உதவியுடன் புதிதாக ஐந்து 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும், பதினான்கு 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும் அமைத்து, தமிழ்நாட்டின் குறிப்பாக சென்னையின் மின் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஐந்து 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களில் இரண்டு துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

ஒரு 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மீதம் இரு துணை மின் நிலையங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படவுள்ளன. பதினான்கு 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களில்

நான்கு துணை மின் நிலையங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு விட்டன. ஆறு துணை மின் நிலையங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் ஆய்வில் உள்ளன.

நான்கு துணை மின் நிலையங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் இந்த மாதம் கோரப்படவுள்ளன. 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில். வேலூர் மாவட்டம், திருவலத்தில், 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையமும். அதனைச் சார்ந்த மின் தொடரமைப்பும் அமைப்பதற்கான ஒப்பந்தக்காரர்கள் தேர்வு செய்யப்பட்டு. பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இதே போன்று 8000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 56 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து இருந்ததில், 9 துணை மின் நிலையங்கள் இயக்கி வைக்கப்பட்டுவிட்டன. 24 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 8 துணை மின் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு, பணி ஆணைகள்

வழங்கப்படவுள்ளன. 9 துணை மின் நிலையங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இவை விரைவில் இறுதி செய்யப்படும். மீதமுள்ள 6 துணை மின் நிலையங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட உள்ளன.

மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கும் பொருட்டு, இந்த நிதியாண்டில் இதுவரை 16,151 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த அரசு 2011 மே மாதம் பொறுப்பேற்றது முதல், 2013 டிசம்பர் வரை 27.5 லட்சம் புதிய மின் இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

நான் ஏற்கெனவே உறுதி அளித்தபடி, மின் வெட்டே இல்லை என்ற நிலைமையை தமிழகம் விரைவில் எட்டிவிடும் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் முதல்வர் ஜெயலலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x