Published : 26 Sep 2016 01:04 PM
Last Updated : 26 Sep 2016 01:04 PM
விழுப்புரம் அதிமுக, திமுகவில் நகர செயலாளர் பதவி செண்டிமென்டில் சிக்கி தவிக்கிறது. இப்பதவியை பெறுபவர் அரசியல் ரீதியாக முன்னேற்றம் காண்பதில்லை என்பதால் இப்பதவியை சொற்பமானவர்களே விரும்புகின்றனர்.
விழுப்புரம் அதிமுக நகர செயலாளர் பதவியை பெறுபவர்கள் அதிகபட்சமாக நகர்மன்ற தலைவராக மட்டுமே பதவி வகிக்க முடிகிறது. ஆனால் திமுகவில் அந்த வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை என்கிறார்கள்.
இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “விழுப்புரம் திமுகவில் நகர செயலாளராக வேங்கை மார்பன், கோபால், பஞ்சநாதன், சர்க்கரை, பாலாஜி, செல்வராஜ் ஆகியோர் பதவி வகித்தாலும் இவர்களால் குறைந்தபட்சம் நகர்மன்ற தலைவராகக் கூட பதவி வகிக்க இயலவில்லை. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பொன்முடி, அதிமுகவை சேர்ந்த சிவி சண்முகத்திடம் தோல்வியை தழுவினார்.
இதன் பின் அப்போதைய திமுக நகர செயலாளராக பதவி வகித்த பாலாஜி, தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்தார். நீண்ட நாட்கள் நிரப்பப்படாமல் இருந்த இப்பதவிக்கு செல்வராஜ் நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். தற்போது மீண்டும் திமுக நகர செயலாளர் பதவி காலியாக உள்ளது. இப்பதவியை வகித்தவர்கள் அரசியல் ரீதியாக முன்னேறவில்லை என்பதால் திமுக நிர்வாகிகள் இப்பதவியை பெற விரும்புவதில்லை” என்றனர்.
இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், “நகர செயலாளராக ஜெயராமன், வேணுகோபால், ஜெயபால், நூர்முகமது, மூர்த்தி, ஜானகிராமன் ஆகியோர் பதவி வகித்தாலும் அவர்களால் குறைந்தபட்சம் நகர்மன்ற தலைவராகக் கூட பதவி வகிக்க முடியவில்லை. தற்போதைய நகர செயலாளர் பாஸ்கரன், கடந்த உள்ளாட்சி தேர்தலில் போடியிட்டு வென்று நகரமன்ற தலைவரானார். அதிமுகவிலாவது நகரமன்ற தலைவர் பதவியை பெறமுடிந்தது. திமுகவில் அந்த வாய்ப்புக் கூட நகர செயலாளர்களுக்கு கிட்டவில்லை” என்கின்றனர்.
விழுப்புரத்தில் திமுக, அதிமுகவில் நகர செயலாளர் பதவி என்றாலே கையெடுத்து கும்பிட்டுவிட்டு அலறியடித்து ஓடும் நிலையே நீடிக்கிறது. இந்த செண்டிமெண்ட் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்குமோ...?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT