Published : 15 Jul 2016 08:04 PM
Last Updated : 15 Jul 2016 08:04 PM
தமிழகத்தில் மாதம் தோறும் மின் கணக்கீடு முறையை அமல்படுத்தக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விருதுநகர் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்தவர் வி.விக்னேஷ்ரகுராம். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,'' தமிழகத்தில் தற்போது இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு முறை அமலில் உள்ளது.
இரு மாத முறை மின் கணக்கீடு முறையில் கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டியதுள்ளது. இதனால் பிற மாநிலத்தில் இருப்பது போல் தமிழகத்திலும் ஒரு மாத மின் கணக்கீடு முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மின்வாரியம் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீமதி வாதிடும்போது, ''தமிழகத்தில் 2.50 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். இரு மாத மின் கணக்கீடு முறை 1987-ம் ஆண்டு முதல் படிப்படியாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.
மின் கணக்கீட்டாளர்கள் யூனியன் வலியுறுத்தியதால் இரு மாத மின் கணக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. இந்த முறையால் மின் நுகர்வோர்களுக்கு இழப்பீடு இல்லை. ஒரு மாதக் கணக்கீட்டு முறையில் என்ன கட்டணம் வருமோ, அதில் இரு மடங்கு கட்டணம் மட்டுமே இரு மாத கணக்கீட்டு முறையில் வசூல் செய்யப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை'' என்றார்.
இதையடுத்து, மின் கட்டணம் வசூல் முறை அரசின் கொள்கை முடிவின் கீழ் வருகிறது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT