Published : 23 Sep 2013 11:42 AM
Last Updated : 23 Sep 2013 11:42 AM

கந்துவட்டிக் கும்பல் பிடியில் திணறும் திருப்பூர்

கடந்த பல ஆண்டுகளாகவே திருப்பூர் நகரம் கந்துவட்டிக் கும்பலிடம் சிக்கித் தவிப்பது கண்கூடாகவே தெரிகிறது. சமீபத்தில் கந்துவட்டி தொடர்பான தற்கொலைகள் அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதைபதைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிறு வீட்டில் குழந்தைகள் இரண்டும் டிவி பார்த்துக்கொண்டிருந்தன. தாய் சுதா சமையல்கூடத்தில் இருந்தார். திடீரென குழந்தைகளின் அலறல் சத்தம். கந்துவட்டிக்காரர்கள் டிவியை தூக்கிக்கொண்டு போயிருந்தார்கள். திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் சிவக்குமார் - சுதா தம்பதி வட்டிக்கு ரூ.500 பணம் வாங்கினார்கள். ஆறு நாட்களில் அசல் இரட்டிப்பாகிவிட்டது. இப்படி பல வாரங்களாக இதுவரை எட்டாயிரம் ரூபாய் கட்டிவிட்டார் சிவக்குமார். இது வட்டி மட்டுமே. சமீபத்தில் கந்துவட்டி கும்பலின் மிரட்டலால் தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்துள்ளார் அவர். சிவக்குமார் ஓர் உதாரணம் மட்டுமே.

இரண்டு வாரம் முன்பு பித்தளைப் பாத்திரத் தொழிலாளர் ஆறுமுகம் என்பவரும் கந்துவட்டிக் கும்பலின் மிரட்டலால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். குழந்தையின் மருத்துவ செலவுக்காக 1500 கடன் வாங்கியவர், அதற்கு வட்டியாக மட்டும் 13 ஆயிரம் கட்டியிருந்தார். ஒருகட்டத்தில் கந்துவட்டி கும்பல் அன்றைய தினம் மாலைக்குள் ஐந்தாயிரம் பணம் தரவேண்டும் என்று கேட்டு மிரட்டவே வேறு வழியில்லாமல் தற்கொலை செய்துகொண்டார்.

“பொம்பளைன்னுகூட பார்க்காம அசிங்கமா பேசுனாங்க. ‘பணத்த கொடுக்க வக்கில்லை. வரிசையா பிள்ளைங்களை மட்டும் பெத்துக்க தெரியுது’ன்னு ஆபாசமா திட்டுனாங்க. இவர் அவங்களோட மிரட்டலுக்கு ரொம்பவும் பயந்து கெடந்தாரு. இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள பணம் தரலைன்னா உன்னைக் கட்டிவெச்சுத் தூக்கிட்டு போயிடுவோம்னு மிரட்டுனாங்க. மூணு மாசமாவே மன உளைச்சல்ல இருந்தாரு. எனக்கும் பயமா இருந்துச்சு. பிள்ளைங்களை பத்திரமா பாத்துக்கோன்னு புலம்பிட்டே இருந்தாரு. திடீர்னு ஞாயித்துக்கிழமை சாயங்காலம் பாத்ரூமுக்குள்ள போய் தூக்கு மாட்டிக்கிட்டாரு. மூணு பொண்ணுங்களை எப்படி வளர்க்கிறதுன்னு தெரியலை...” என்று அழுது புலம்புகிறார் அவரது மனைவி கல்பனா.

பனியன் கம்பெனியில் வேலை செய்யும் ராஜாவின் இரண்டு சக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றுள்ளது இன்னொரு கந்துவட்டிக் கும்பல். “தொழில்ல பெருசா வருமானமில்லை. கைமாத்தா ஆயிரம் ரூபாய் வாங்கினேன். நேரம் காலம் தெரியாம வீட்டு வாசல்ல வந்து நிக்குறாங்க. எந்த நேரத்துல என்ன நடக்குமோன்னு பயந்தே கெடக்கிறோம்” என்கிறார் பதற்றத்துடன். அப்புசாமிக்கு நடந்தது வேறு விதமான கொடுமை.

பணம் கொடுத்த கும்பல் அவர் வேலை செய்யும் இடத்துக்கே சென்று அசிங்கப்படுத்தி மிரட்டியதோடு கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளது. இதனால், வேலையும் பறிபோய் திருப்பூரில் பிழைக்க முடியாமல் குடும்பத்துடன் சொந்த ஊருக்கே கிளம்ப முடிவு செய்துள்ளார் அப்புசாமி.

மதுரையைச் சேர்ந்த பெருமாள், ‘1996ல் பஞ்சம் பிழைக்க வந்தேன். இப்ப வரை வாழ்க்கைத்தரம் மாறலை. மனைவியும் இறந்துட்டா. ஒரே பெண் குழந்தையை கஷ்டப்பட்டு வளர்க்கிறேன். திருப்பூர்ல ஞாயிறு, திங்கள் கிழமைகள்லதான் நிறைய தற்கொலை நடக்குது. ஏன்னா சம்பள நாளைத் தேடி கந்துவட்டிக்காரங்க வந்திடுறாங்க” என்கிறார்.

சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத் தலைவர் கே. ரெங்கராஜ், “திருப்பூரில் கந்துவட்டித் தொழில் குறித்து அரசு விரிவான ஆய்வு நடத்த வேண்டும். திருப்பூர் பகுதியில் அபரிமிதமாக கொள்ளை லாபத்தோடு இயங்கும் கட்டிவட்டிக் கும்பல்கள் குறித்து தனிக்கவனம் செலுத்துவதோடு தொடர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்ட முடியும்” என்றார்.

திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அமித்குமார் சிங்கிடம் பேசியபோது, “திருப்பூரின் இன்றைய மிக முக்கியப் பிரச்சினை இது. கந்துவட்டி பிரச்சினை தொடர்பாக நிறைய புகார் மனுக்கள் வருகின்றன. கந்துவட்டிக்கு விடுபவர்கள் ஆதாரங்களாக எதையும் கொடுப்பதில்லை என்பதால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

வட்டிக்கு பணம் வாங்குபவர்கள் இவ்வளவு பணம் கட்டியுள்ளேன் என்று ஒரு நோட்டில் எழுதி வாங்கலாம். அப்படி ஏதாவது ஒரு சிறிய ஆதாரம் இருந்தால்கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இப்போதுகூட பழனிசாமி என்பவர் கொடுத்த புகாரில் கந்துவட்டிக் கும்பலைச் சேர்ந்த விஸ்வநாதன், சின்னசாமி ஆகியோரை கைது செய்துள்ளோம்” என்றார்.

புகார் தந்தவர் வெட்டிக்கொலை

திருப்பூர் மட்டுமல்ல.. விசைத் தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் பகுதிகளிலும் கந்துவட்டிக் கும்பலின் அட்டூழியம் அதிகம். கடந்த 2010-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது. பணம் வாங்கிய ஒரு குடும்பத்தினரை கந்துவட்டிக் கும்பல் மிரட்டியதுடன் அக்குடும்பத்துப் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொந்தரவுக்கும் உள்ளாக்கியது. இதுகுறித்து பள்ளிப்பாளையம் மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் வேலுசாமி போலீசில் புகார் கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கந்துவட்டிக் கும்பல் அவரை நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்தது. இதனால், அப்பகுதியில் இன்றும் மக்கள் கந்துவட்டி தொடர்பாக புகார் அளிக்கவே அஞ்சுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x