Published : 07 Sep 2016 10:12 AM
Last Updated : 07 Sep 2016 10:12 AM
சம்பா நெல் சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ள காவிரி டெல்டா விவசாயிகள், வரும் 15-ம் தேதிக்குள் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
விதைப்புக்குத் தயார்
திருவாரூர், நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துள்ளது. இந்த மழையைப் பயன்படுத்தி, விளை நிலங்களை உழவு செய்து, நெல் விதைப்புக்குத் தயார் செய்து வைத்துள்ளனர். ஓரிரு நாட்களில் மண் சற்று காய்ந்தவுடன் விதைப் புப் பணியை மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பே, சி.ஆர்.1009 போன்ற நீண்டகால ரகங்களை விதைத்துள்ளனர். அப்பகுதி விளைநிலங்களில் இளம் நாற்றுகள் முளைத்துள்ளன.
விவசாயிகள் வலியுறுத்தல்
நெல் நாற்றுக்குத் தண்ணீர் பாய்ச்ச மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கும் தேதியை முன்கூட்டியே அறிவித்தால், நம்பிக்கையுடன் பணியை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறும்போது, “பொதுவாக, மேட்டூர் அணையில் 90 அடி தண்ணீர் இருந்தால்தான், பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும். ஆனால், நடப்பு ஆண்டில் காலம் கடந்துவிட்டது.
இனி, 135 நாட்கள் வளரும் மத்திய கால ரக நெல் விதையை மட்டுமே விதைக்க முடியும். வடகிழக்கு பருவமழையைத் தாங்கும் அளவுக்கு சம்பா பயிரை வளர்க்க வேண்டும் எனில், விவசாயிகள் உடனடியாக நெல் விதைக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத் துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும் தேதியை அறிவித் தால்தான், நெல் விதைப்பு செய்யும் பணியை நம்பிக்கையுடன் தொடங்குவோம். வரும் 15-ம் தேதிக்குள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தால், சம்பா சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT