Published : 24 Jun 2016 03:07 PM
Last Updated : 24 Jun 2016 03:07 PM

முட்டியதில் மண்டை உடைந்ததா? அதிக மயக்க மருந்து காரணமா?- மதுக்கரை மகராஜ் மரணத்தில் தொடரும் சர்ச்சை

கோவை மதுக்கரையில் வனத்துறையினரால், 'மிஷன் மதுக்கரை மகராஜ்' என்ற பெயரில் பிடிக்கப்பட்டு கராலில் (யானைகள் அடைக்கப்படும் கூண்டு) அடைக்கப்பட்டிருந்த ஆண் யானை இறந்தது. இதற்கு முன்தினம் ஆண் யானை பிடிக்கப்பட்ட பகுதியிலேயே ரயிலில் சிக்கி பெண் யானை ஒன்றும் இறந்தது. இந்த சம்பவங்கள் வன உயிரின ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

'மயக்க ஊசி அதிகமாக செலுத்தியதால் யானை இறந்தது; வனத் துறையினர் பிடித்தது ஒற்றை யானை அல்ல; ஒரு யானைக் கூட்டத்தை சேர்ந்த வழிகாட்டி யானை; அது இல்லாது, நிலை தடுமாறிய அந்தக் கூட்டத்தில் உள்ள பெண் யானைதான் ரயிலில் சிக்கி இறந்திருக்கிறது' என்றெல்லாம் சந்தேகங்கள் கிளப்பி வருகின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.

அதே சமயம், நேற்று முன்தினம் இரவு மதுக்கரையில் ஓர் ஒற்றை யானை உலா வர, அதை விரட்டினர் மக்கள். அதைத்தொடர்ந்து, 'இதுதான் நாங்கள் பிடிக்கச் சொன்ன ஒற்றை யானை, வனத்துறை பிடித்து கராலில் அடைத்து இறந்த யானை வேறு யானை' என்று பொதுமக்களும் கூறுகின்றனர். இருந்தாலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இது சம்பந்தப்பட்ட சிலரிடம் பேசியதிலிருந்து...

'ஒரு யானையை பிடிப்பதற்கான திட்டங்கள்பல மிஷன் மகராஜ் விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை. முதுமலையில் 16 ஆண்டுகளுக்கு முன்பு மக்னா யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தபோது அதை 4 மணி நேரம் அங்கேயே கட்டி வைத்து பிறகு நடத்திச் சென்றே கராலில் அடைத்தனர்.

இதுதான் நடைமுறை. மகராஜ் யானைக்கு மயக்க ஊசி செலுத்தியவுடன் லாரியில் ஏற்றிச் சென்றுள்ளனர். 2 மாதங்களுக்கு முன்பு முதுமலையில் ஒரு யானையை பிடித்தனர். அதற்குப் பதிலாக வேறு யானைக்கு முதலில் மயக்க ஊசி போட்டு பிடித்து விட்டதாகவும், அது பின்னர் தெரிந்து, அதற்கு மாற்று ஊசி போட்டு காட்டுக்குள் துரத்திவிட்டு, பிறகுதான் குறிப்பிட்ட யானையை பிடித்ததாகவும் அங்குள்ள யானைகள் மருத்துவர்களே தெரிவிக்கின்றனர். அதுபோல இதிலும் நடந்த தவறுகள் ஏராளம்' என்கிறார் யானைகள் குறித்த ஆய்வாளரும், கூடலூர் விவசாயிகள், தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான எம்.எஸ். செல்வராஜ். அவர் கூறும்போது, 'முதுமலை மக்னா யானை விவகாரத்தில் வெளிநாட்டு மருத்துவரை வரவழைத்த இயற்கை ஆர்வலர் ஒருவர் கூறும்போது, 'யானைகள் மயக்கமடைய பயன்படுத்தும் சைலசைன் (ZYLAZINE) மருந்து கொஞ்சம் கூடுதலானால் உயிருக்கே கேடு விளைவித்துவிடும். இந்த மருந்தை 25 கிலோ நாய்க்கு 1 முதல் 1.5 எம்எல் போட்டால் மயங்கும். 300 கிலோ எடையுள்ள ஒரு மாட்டுக்கு இதே அளவு செலுத்தினால் அது படுத்துவிடும். யானைக்கு ஒரு டன் எடை இருந்தால் அதிகபட்சம் 100 மிலி கிராம் முதல் 200 மிலி கிராம் வரை அளிக்கலாம். இதை ஒரே ஒரு முறைதான் செலுத்தலாம். அந்த எல்லை இதில் மீறப்பட்டிருப்பதாகவே தெரிகிறது' என்றார்.

கால்நடைத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, 'கராலில் முட்டி, மண்டையோடு உடைந்துவிட்டது என்று சொல்வது வேடிக்கை. அப்படியானால் யானையின் நெற்றியில் வீக்கம் இருந்திருக்க வேண்டும்.? அடுத்தநாள் மாலை பிரேத பரிசோதனை நடந்தது. முந்தின நாள் இரவு 7 மணிக்கே இந்த காரணத்தால்தான் யானை இறந்தது என்ற தகவலை என்ஜிஓக்கள் சிலருக்கு 'வாட்ஸ் அப்' தகவலாக அனுப்பியுள்ளார் வனத்துறை அதிகாரி ஒருவர். எப்படி? பிரேத பரிசோதனை செய்ய திருக்குமரன், கோவிந்தராஜ், சித்திக், சரவணகுமார் ஆகிய 4 கால்நடை மருத்துவர்களை வனத்துறை தேர்வு செய்துள்ளது. இதில் ஒருவர் மட்டுமே யானைகள் சிலவற்றுக்கு வைத்தியம் பார்த்துள்ளார்.

ஆனால் நீண்டகாலமாக யானைகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றியிருக்கும் மருத்துவர்கள் சண்முக சுந்தரம் (ஓய்வு), கலைவாணன் (ஒட்டப்பிடாரம்), அசோகன் (கோவை), டாக்டர் ராஜேந்திரன் போன்ற பலர் உள்ளனர். அவர்களிடம் ஏன் வனத்துறையினர் கேட்கவில்லை? சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும், வனத்துறைக்கும் சில சச்சரவுகள் உள்ளன. யானையின் உடல்கூறுகளை அங்கேதான் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். சரியான அறிக்கை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே' என்றார்.

கோவை வனத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, 'கராலில் அடைத்த யானை ஒற்றை யானையேதான். அதைத்தான் வனத்துறை குழு பிடித்தது. அது கராலை முட்டி, முட்டி மண்டை பிளந்தே உயிரிழந்துள்ளது. இப்போது மதுக்கரையில் தென்பட்டது கூட்டத்து யானை. அது தனி யானையே அல்ல. அதேபோல், மயக்க மருந்தை அதிகமாகப் போட்டு ஒரு யானையை கொல்லும் செயலில் மருத்துவர்களே ஈடுபடுவார்களா?' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x