Published : 19 Mar 2014 11:59 AM
Last Updated : 19 Mar 2014 11:59 AM

திமுக மீது குற்றம் சுமத்துவதை ஜெ. நிறுத்த வேண்டும்: கருணாநிதி

2ஜி வழக்கில் திமுக மீது குற்றம் சுமத்துவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அலைக்கற்றை பற்றிய வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில்தான் உள்ளது. ஆ.ராசா குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கவில்லை. அவர் தொடர்ந்து ஆஜராகி வாதாடி வருகிறார். ஆனால், திமுக ஊழல் செய்ததாக ஜெயலலிதா பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நேரத்தில் முந்தைய ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா செய்த முறைகேடுகளைப் பற்றி நினைவுபடுத்த விரும்புகிறேன். டான்சி நில அபகரிப்பு, கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஓட்டல் கட்ட நிலம் வழங்கியது போன்ற வழக்குகளில் ஜெயலலிதா குற்றவாளி என்று கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கலர் டி.வி. வாங்கியதில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் ஜெயலலிதா மீது வழக்கு பதியப்பட்டது.

ஸ்பிக் நிறுவனப் பங்குகளை விற்றது குறித்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிபதி வெங்கடாசலம் அளித்த தீர்ப்பில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கையால் அரசுக்கு ரூ.28.29 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதை எம்.ஏ.சிதம்பரம், ஏ.சி.முத்தையா, ஜெயலலிதா ஆகியோர் சேர்ந்தோ, தனித்தனியாகவோ 6 மாதத்துக்குள் ஈடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

தற்போது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜாராகாமல் இருக்க பல வழிகளைக் கையாண்டு வருகிறார்.

இப்படி ஜெயலலிதா மீதான பல வழக்குகளில் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் கருத்துகளை, தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். பின்னர் ஜெயலலிதா ஆட்சியில், சில வழக்குகளை மேல்முறையீடு செய்து, தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

2ஜி வழக்கைப் பொருத்தவரை அது விசாரணையில் உள்ள ஒன்று. இறுதித் தீர்ப்பு வந்த பிறகுதான் யார் குற்றவாளி என்பது தெரியவரும். எனவே, திமுக மீது குற்றம்சாட்டுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x