Published : 27 May 2017 10:19 AM
Last Updated : 27 May 2017 10:19 AM

மானியத்தில் தரமற்ற ஆந்திரா வைக்கோல் விநியோகம்: சிவகங்கை ஆட்சியரிடம் விவசாயிகள் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ஆந்திரா வைக்கோல் தரமற்றதாக உள்ளது. இதை சாப்பிடும் கால்நடைகள் கழிச்சலுக்கு ஆளாகின்றன என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் சு.மலர்விழி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, வேளாண் இணை இயக்குநர் செல்வம், கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகள் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் அளித்த பதில் வருமாறு:

தண்டியப்பன்: கால்நடைக ளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வைக்கோல் தற்போது ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. அது தரமற்றதாக, பச்சையாக உள்ளது. இதை சாப்பிடும் மாடுகள் கழிச்சலுக்கு உள்ளாகின்றன. கால்நடை வைத்திருப்போருக்கு முறையாக அடையாள அட்டை வழங்காமல் மற்றவர்கள் பயனடை கின்றனர். இதில் முறைகேடு நடைபெறுவதை ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும்.

ஆட்சியர்: நீங்கள் பொதுவான புகாராகவே தெரிவிக்கிறீர்கள். குறிப்பிட்ட இடம், ஆதாரத்தோடு தெரிவியுங்கள்.

தண்டியப்பன்: திருப்புவனம் கால்நடை மருத்துவமனையில் வழங்கிய வைக்கோல் தரமற்றதாக உள்ளது. உரிய பயனாளிகளுக்கு வழங்கவில்லை.

ஆட்சியர்: கால்நடை இணை இயக்குநர் திருப்புவனம் சென்று விசாரித்து அறிக்கை கொடுங்கள்.

ராஜேந்திரன்: சாலைக்கிராமம் பகுதி வங்கியில் விவசாயிகளுக்கு நகை, பயிர்க் கடன் வழங்க மறுக்கிறார்கள். மேலும் அரசு வங்கிகள் நகை மதிப்பீட்டுக் கட்டணமாக வரம்பின்றி வசூலிக்கின்றனர். அதற்குரிய ரசீது வழங்கப்படுவதில்லை.

ஆட்சியர்: இது குறித்து வங்கியாளர்கள் கூட்டத்தில் விவாதித்து மாவட்டம் முழுவதும் ஒரு குறைந்த அளவு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

ராஜா: பயிர் செய்யாத மற்றவர்கள் விவசாயிகள் பெயரில் வங்கிக் கடன் பெறுகின்றனர்.

ஆட்சியர்: அடங்கல், ஆதார் எண்ணோடு இணைத்து பயிர்க் கடன் வழங்கப்படும் முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. தவறாக பயிர்க் கடன் பெறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

வீரபாண்டி: விவசாயிகளுக்கு நியாய விலை கிடைக்க மானாமதுரையில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். இங்கு பருத்தியை ஏலம் விடும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

ஆட்சியர்: விவசாயிகளுக்கு நியாய விலை கிடைக்க போதிய இடவசதியுடைய கொள்முதல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x