Published : 17 Sep 2016 06:16 PM
Last Updated : 17 Sep 2016 06:16 PM
முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மாவட்ட திமுக தெற்கு மாவட்டச் செயலருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மகன் ரமேஷ் அதிமுகவில் இணைந்ததால் விருதுநகர் மாவட்ட திமுகவினரிடையே திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பொறுப்பு வகித்தார். எம்.ஜி.ஆர். இறந்தபின் அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டார். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக 1999-ல் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுக ஆட்சியிலும் இவர் சாத்தூர் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று அமைச்சரானார்.
விருதுநகர் மாவட்ட திமுக செயலராக பொறுப்பு வகித்து வந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தின் மாவட்ட திமுகவை தனது கட்டுப் பாட்டில் வைத்திருந்தார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் திமுக 4 தொகுதிகளை கைப்பற்றியது. அதில், அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். திருச்சுழி தொகுதியில் வடக்கு மாவட்டச் செயலர் தங்கம்தென்னரசுவும், விருதுநகர் தொகுதியில் ஏ.ஆர்.ஆர்.சீனி வாசனும் வெற்றிபெற்றனர். ராஜபாளையம் தொகுதியிலும் தங்கப்பாண்டியன் வென்றார்.
அதைத்தொடர்ந்து, திமுக நிர்வாகிகள் தேர்வுசெய்யப் பட்டதில் பல பிரச்சினைகள் எழுந்தன. இந்நிலையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மகன் ரமேஷ் திடீரென அதிமுகவில் இணைந்துள்ளார். இச்சம்பவம் திமுகவினரிடையே திடீர் குழப்பத்தையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து, முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மகன் ரமேஷ் கூறியதாவது:
திமுகவில் அப்பா மாவட்டச் செயலராகவும் எம்.எல்.ஏ.வுமாக இருந்தாலும் கட்சியில் எனக்கென்று எதையும் நான் கேட்டதில்லை. எங்களுக்குள் எந்த சொத்துப் பிரச்சினையும் இல்லை. அப்பாவை அறிமுகப்படுத்தியது அதிமுகதான். திமுகவுக்கு போனபிறகு பல தேர்தல்களில் உடனிருந்து களப் பணி ஆற்றியுள்ளேன்.
அப்பாவைச் சுற்றி ஒரு குறுகிய வட்டம் உள்ளது. அதில் 13 பேர் உள்ளார்கள். இவர்களைத் தாண்டி கட்சிக்காரர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. எந்த கருத்தையும் சொல்லக்கூட முடியவில்லை.
அப்பா அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற இளைஞரணி கூட்டத்தில், கட்சியினருக்கு ஸ்டாலின் படம் போட்ட கைகடிகாரம் கொடுக்கலாம் என திட்டமிட்டோம். ஆனால், அதற்கு சிலர் முட்டுக்கட்டை போட்டனர். இப்படி எல்லா விஷயத்திலும் சிலரது தலையீடு இருந்தது.மாவட்ட அளவில் திமுகவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டபோது, கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
ஆனால், அப்பாவுக்கு நெருக்கமான அந்த 13 பேர் பரிந்துரைக்கும் நபர்களுக்குத்தான் கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போதுதான் எனக்கும் அப்பாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் எனக்கு திமுகவில் இருக்கப் பிடிக்கவில்லை. அதிமுகவில் வலுவான தலைமை என்பதாலும், கட்சிப் பணி யாற்றுபவர்களுக்கு உரிய மரியாதை உள்ளது, என்பதாலும் நல்ல தலைமையின்கீழ் இருக்க வேண்டும் என்பதற்காவும் அக்கட்சியில் இணைந்தேன்.
நான் திமுகவிலிருந்து அதிமுகவுக்குச் செல்ல வேண்டும் என்று முடிவுசெய்ததை அறிந்த சிலர், என்னை மிரட்டினர்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் என்னைப்போல மேலும் பலர் அதிமுகவில் இணைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT