Published : 04 Apr 2017 11:39 AM
Last Updated : 04 Apr 2017 11:39 AM
அடர்நடவு முறையில் (high density planting) ‘மா’ சாகுபடி செய்தால் மரங்கள் விரைவாக விளைச்சலுக்கு தயார் ஆவதோடு, ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் கிடைக்கிறது. அதனால், தற்போது அடர் நடவுமுறையை தோட்டக்கலைத் துறை விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் 7 ஆயிரம் ஹெக்டேரில் அழகர்கோவில், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் செந்தூரா, கல்லாமை (பெங்களூரா), நீலம் (காசா), அல்போன்சா, இமாம்பாஸ், பங்கனப்பள்ளி, ரிமோரியா, மல்கோவா மற்றும் உள்ளூர் மா ரகங்களை பயிரிட்டுள்ளனர். தற்போது புதிதாக 40 ஹெக்டேரில் ‘அடர் நடவு’ முறையிலும் விவசாயிகள் மா சாகுபடி செய்துள்ளனர்.
சாதாரண நடவு முறையைக் காட்டிலும், அடர்நடவு முறையில் அதிக மகசூல் கிடைப்பதால் விவசாயிகள், மா விவசாயத்தில் ‘அடர் நடவு’ முறையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தோட்டக்கலைத் துறையும் இந்த சாகுபடி முறையையே பரிந்துரைத்து வருகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை மாவட்ட துணை இயக்குநர் பூபதி கூறியதாவது:
சாதாரண முறையில் 10-க்கு 10 மீட்டர் இடைவெளியில் மா சாகுபடி செய்கின்றனர். இதில் ஏக்கருக்கு 40 மாங்கன்றுகளை மட்டுமே நடவு செய்ய முடியும். மகசூலும் அடர் நடவு முறையைவிட குறைவாகவே கிடைக்கிறது. அடர்நடவு முறையில் மாங்கன்றுகளை 3-க்கு 2 மீட்டர் இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 680 மாங்கன்றுகளை நடலாம். பழைய முறையில் 6 முதல் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மரங்கள் காய்ப்புக்கு வரும். ஆனால், அடர் நடவு முறையில் 3 முதல் 4 ஆண்டுகளிலேயே காய்த்து விடும். பழைய முறையில் ஏக்கருக்கு 5 டன் மட்டுமே மகசூல் கிடைக்கிறது. அடர் நடவு முறையில் 10 முதல் 12 டன் மகசூல் கிடைக்கிறது.
ஒவ்வொரு மரத்தை ஒப்பிடும்போதும், பழைய முறையில் ஒரு மரத்தில் 100 கிலோ மகசூல் கிடைக்கும். ஆனால், அடர் நடவுமுறையில் 30 கிலோ வரை மட்டுமே மகசூல் கிடைக்கும். ஆனால், மொத்த மகசூலை ஒப்பிடும்போது பழைய முறையைக் காட்டிலும் இரட்டிப்பு மகசூல் கிடைக்கிறது. தற்போது தொலைநோக்கு பார்வை யில் யாரும் விவசாயம் செய்வ தில்லை. நம்முடைய காலத்திலேயே பலன் கிடைக்க வேண்டும் என நினைக்கிறோம். அதற்கு அடர்நடவு முறையே சிறப்பானது. இந்த முறையில் ஹெக்டேருக்கு ரூ. 10 ஆயிரம் மானியம், சொட்டுநீர் பாசனம் செய்ய சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் அரசால் வழங்கப்படுகிறது. இதுதவிர, அடர் நடவு முறையில் புதிய யுக்திகளை கையாளவும் தோட்டக் கலைத்துறையால் ஆலோ சனை வழங்கப்படுகிறது.
அதற்காக நவீன வேளாண் உபகரணங்களை மானியத்தில் வழங்குகிறோம். மா உற்பத்தி அதிகரிக்கும்போது, விளை பொருளை சந்தைப் படுத்தவும் விவசாயிகளுக்கு உதவுகிறோம். பிரபல குளிர்பான நிறுவனங்கள், விவசாயிகளிடம் மாம்பழங்களை கொள்முதல் செய்து, மாங்கூழ் தயாரிக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் மா விளைச்சல் அதிகம். அதேபோல மதுரையிலும் உற்பத்தியை அதிகரிக் கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT