Published : 16 Sep 2016 08:37 AM
Last Updated : 16 Sep 2016 08:37 AM

கேரள - தமிழக அதிகாரிகள் மோதல் போக்கு: பரம்பிக்குளம் தடியடிக்கு காரணம் என்ன?

கேரள மாநிலம் பரம்பிக்குளம் அணைப் பகுதியில் தமிழக மக்களும், தமிழக அதிகாரிகளும் கேரள போலீஸாரால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கேரள பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம், தூணக்கடவு, பெரு வாரிப்பள்ளம் ஆகிய அணைகளை பராமரிப்பதில் கேரள- தமிழக அதிகாரிகளிடையே உள்ள ‘ஈகோ’ மோதலே என்பது தெரியவந்துள்ளது.

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் இடம் பெறும் பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய அணைகள் கேரள பகுதி யில் அமைந்துள்ளன. இரு மாநில ஒப்பந்தப்படி இந்த அணைகளை பராமரிப்பது, பாதுகாப்பது, நீர் மேலாண்மை போன்றவற்றை தமிழக பொதுப் பணித் துறை செய்து வருகிறது.

அனுமதி மறுப்பு

பரம்பிக்குளம் அணையைச் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 40 பழங்குடியின குடும்பங்களும், அணைகள் கட்டும்போது வந்து இங்கேயே தங்கிவிட்ட மக்களின் சுமார் 60 குடும்பங்களும் வசித்து வருகின்றன. சில ஆண்டுகளாக தமிழக பொதுப்பணித் துறையினர் இப்பகுதி குழந்தைகளின் படிப்புக்காக பொதுப்பணித் துறை பேருந்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

கடந்த திங்கள்கிழமை காலை குழந்தைகளை ஏற்றிச் செல்ல வழக்கமாக வரும் வாகனம் வரவில்லை. இந்த சம்பவத்துக்கு 2 நாள் முன்பு, இந்த பேருந்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் சிலருடன் அணைப் பகுதிக்கு சென் றுள்ளது. அங்கு இருந்த கேரள வனத்துறையினர், அதைத் தடுத்துள்ளனர். ‘‘இது பள்ளி வாகனம். குழந்தைகளை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதிப்போம். இது எங்கள் அதிகாரிகள் உத்தரவு’’ என்று தெரிவித்துள்ளனர்.

பதிலுக்கு, பொதுப்பணித் துறை அதிகாரிகள் ‘‘இது பொதுப்பணித் துறை அணைப் பகுதிக்கு செல்ல காலங்காலமாக பயன்படுத்தி வரும் வாகனம். நாங்கள் அணைப் பகுதிக்கு ஆய்வுக்குச் செல்ல வேண்டும்’’ என கூறியுள்ளனர். இந்தப் பிரச்சினை முற்றி, இறுதியில் மாலை 6 மணிக்கு மேல் அணைப் பகுதியே ஆனாலும், வனப் பகுதிக்குள் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினையால்தான் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பேருந்தை அனுப்ப மறுக் கிறார்கள் என்பதை உணர்ந்த அந்தப் பகுதி மக்கள் அங்கு உள்ள கேரள வனத்துறை அதிகாரிகளை சந்தித்து நியாயம் கேட்டுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, கேரள போலீஸார் வந்து பேசினர். ஆனால், மக்கள் சமாதானம் ஆகவில்லை. எனவே, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம், ‘பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம்’ என அழைப்பு விடுத்துள்ளனர். முதலில் வர மறுத்த அலுவலர்கள், 2 கேரள போலீஸார் நேரில் வந்து அழைக்க, அங்கு சென்றுள்ளனர்.

கேரள போலீஸார் தடியடி

ஒரு உதவி செயற்பொறியாளர், 2 உதவிப் பொறியாளர்கள் அங்கு இருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அவர்கள் பேசிக்கொண்டு இருந்த போது வெவ்வேறு வாகனங்களில் வந்து இறங்கிய கேரள சிறப்புப் போலீஸார், கூடியி ருந்தவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். இதில் 32 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பரம்பிக்குளம் முகாம் அலுவலக பொதுப்பணித் துறை அலுவலர்கள் கூறியதாவது:

தொடர்ந்து இடையூறு

இங்கே, மாவட்ட வனத்துறை அலுவலர் அஜ்ஜன்குமார் வந்த பிறகு தொடர்ந்து பிரச் சினைதான். இந்த அணைப் பகுதிக்கு 2 கிமீ தொலைவில் பிரதான சாலையில்தான் வனத் துறை குடியிருப்புகள், பொதுப்பணித் துறையினர் குடியிருப்புகள், பொதுப்பணித் துறை அலுவல கங்கள் அமைந்துள்ளன. அணை உள்ளிட்ட நம் அலுவலகங்கள் எல்லாமே கேரள பகுதிகள்தான் என்றாலும் அவை தமிழகத்தின் லீஸில் (வாட கையில்) உள்ளன. தற்போது தடியடி சம்பவம் நடந்த இடமும் நம் ‘லீஸ்’ பகுதிதான்.

கடந்த மார்ச் மாதம் ஒரு நாள் அணையில் ஒரு ஷட்டர் பழுதாகிவிட்டது. அதை சரிசெய்ய ஆழியாறு அலுவலகத்தில் இருந்து ஒரு செயின் பிளாக் எடுத்து வந்து சரிசெய்ய வேண்டி யிருந்தது. அதை செய்யாவிட்டால் அடுத்த நாள் பெரிய கசிவு ஏற்பட்டுவிடும். அதற்கு நேரம் நிறைய பிடிக்கும், அதற்கு ஒத்துழைக்க வனத்துறை அதிகாரியிடம் வாய்மொழி அனுமதி பெற்றுவிட்டுத்தான் செய்தோம். பழுதை சரிசெய்து ஆனப்பாடி செக்போஸ்ட் வரும்போது மணி 6 ஆகிவிட்டது. ‘‘சோதனைச் சாவடியை திறக்க முடியாது. லாரியை, பழுது நீக்கும் சாதனங்களை வெளியே விடமுடியாது’’ என்று சொல்லிவிட்டனர் வனத்துறையினர். அதே போல், கடந்த மாதம் பரம்பிக்குளம் அணையில் முக்கியப் பணி முடித்துவிட்டு ஒரு பொக்லைன் வெளியே வர சிறிது தாமதமாகிவிட்டது. ஆனப்பாடி சோதனைச் சாவடி திறக்கப்படவில்லை. இரவு முழுவதும் அங்கேயே இருந்தோம்.

பரம்பிக்குளம் அணை அருகில் ஒரு மாரியம்மன் கோயில் உள்ளது. அங்கு ஒரு நாள் இரவு எங்கள் பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் வர விருப்பப்பட்டார்கள். டிஎப்ஓ-கிட்ட அனுமதி கேட்டுவிட்டு வரச் சொன்னோம். மொத்தம் 20 வண்டிகள் வந்தன. அவற்றை சோதனைச் சாவடியை தாண்டி விட மறுத்துவிட்டார்கள். வந்த அதிகாரிகள் எல்லாம் இரவு 10 மணி வரை காத்திருந்துவிட்டு திரும்பிச் சென்றார்கள்.

இந்த அளவு நெருக்கடி இல்லை

கேரள வனத்துறை அதிகாரி நிறைய சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கிறார். அதற்கு நாங்க இடைஞ்சலா இருப்பதாக கருதுவதால் எங்களுக்கு இப்படியெல்லாம் இடையூறுகளை ஏற்படுத்துகிறார். இங்கே 60 ஆண்டுகளாக அணைப் பணிகள், பராமரிப்புப் பணிகள் நடக் கின்றன. இந்த அளவுக்கு நெருக்கடி எந்த அதிகாரியும் கொடுத்ததில்லை. இதுபற்றி கேரள நீர்வளத்துறை அதிகாரிகள், வனத் துறை அதிகாரிகளுக்கு கடிதங்களை எழுதியிருக்கி றோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் அலுவலகத்துக்கும் விரிவான கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. அதற்கும் பதில் இல்லை. எங்களுக்கு இப்போதெல்லாம் அணைப் பகுதிக்கு பணிக்கு போகவே அச்சமாக உள்ளது. இவ்வளவு விபரீதமாக பிரச்சினை நடந்த பிறகும் இரு மாநில அரசாங்கமும் பேசாமலேயே இருந்தால் நாங்கள் அணைக்கு வேலைக்கு போகவே யோசிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நீதி கிடைக்குமா?

தடியடி சம்பவம் குறித்து கொல்லங்கோடு போலீஸார் விசாரித்து வருகின்றனர். தமிழக மக்கள், அதிகாரிகள் மீதான கேரள போலீஸாரின் தடியடி சம்பவத்தின் பின்னணியில் கேரள வனத்துறை அதிகாரிகள் இருக்கும்போது கேரள போலீஸார் விசாரணையில் நீதி கிடைக்குமா? தமிழக அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்

இச்சம்பவம் குறித்து பரம்பிக்குளம் செயற்பொறியாளர் இளங்கோவன் கூறும்போது, ‘‘அவர்கள் திட்டமிட்டேதான் பேச்சுவார்த்தைக்கு அழைத்து தடியடி நடத்தியிருக்கிறார்கள். பிரச்சினையை பேசி முடிக்கத்தான் பார்த்தோம். அதை பெரிதுபடுத்திவிட்டார்கள். தடுக்க வேண்டிய அங்கு இருந்த அதிகாரிகள் தடுக்கவில்லை. எங்கள் உயிருக்கு அங்கே தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது. உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இரு மாநில அரசும் பேசி முடிவெடுக்க வேண்டும். பிரச்சினைக்குக் காரணமான டிப்ஓ, சர்க்கிள் இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டும்’’ என்றார்.

விதி மீறலை அனுமதிக்க முடியாது

கேரள வனத்துறையினர் கூறும்போது, ‘‘மாலை 6 மணிக்கு மேல் வனத்துக்குள் யாரும் போகக்கூடாது என்பது விதிமுறை. தொடர்ந்து விதிமீறல் நடந்து வருவதை எப்படி அனுமதிக்க முடியும். தமிழ்நாட்டு பொதுப்பணித் துறை அதிகாரிகள் சிலர் அணைப் பணி என்ற பெயரில் நிறைய சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கிறார்கள். அதில் தவறுகளும் நடக்கின்றன. அதைத்தான் இங்கு வரும் அதிகாரிகள் தடுக்கிறார்கள். அதனால்தான் இந்த பிரச்சினையே பெரிதாகி உள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x