Published : 22 Jan 2014 03:41 PM
Last Updated : 22 Jan 2014 03:41 PM
விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், வங்கிகள் கடனை வசூலிக்கும் நடவடிக்கைகளில் கெடுபிடி காட்டுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஜப்தி நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் சாலை மறியல் போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
போராட்டம் நடத்திய விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி நிலவியது. பயிர்கள் கருகியதால் ஏற்பட்ட இழப்பை தாங்க முடியாமல் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நடப்பாண்டிலாவது ஓரளவு நிலைமை சீரடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைவாக இருந்ததால் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு சென்றடையவில்லை.
நெல்லுக்கும், கரும்புக்கும் போதிய அளவு கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் நடப்பாண்டிலும் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் பாதிக்கப்பட்டனர். விவசாயத்தில் இழப்பு ஏற்பட்டதால் கூட்டுறவு வங்கிகளிலும், பொதுத்துறை வங்கிகளிலும் வாங்கிய கடனை விவசாயிகளால் செலுத்த முடியவில்லை. ஆனால், விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாத பொதுத்துறை வங்கிகளும், சில கூட்டுறவு வங்கிகளும் விவசாயிகளின் சொத்துக்களை ஜப்தி செய்து ஏலத்தில் விட்டு கடனை வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.
கடனுக்காக அடகு வைக்கப்பட்ட நகைகள் ஏலத்தில் விடப்படும் என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன. விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், வங்கிகள் கடனை வசூலிக்கும் நடவடிக்கைகளில் கெடுபிடி காட்டுவது மனிதாபிமானமற்ற செயலாகும்; இதை நான் கண்டிக்கிறேன்.
இந்த நிலையில், விவசாயிகளின் பிரச்சினைகளை கடுமையாக அணுகுவதைவிட, கனிவாக அணுகுவது தான் சரியானதாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே வறட்சி உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்து வருவதை கருத்தில் கொண்டு, அனைத்து வகையான வேளாண் கடன்களையும் மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும்.
இதுகுறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும்வரை சொத்துக்களை ஜப்தி செய்வது, அடகு வைக்கப்பட்ட நகைகளை ஏலத்தில் விடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை வங்கிகள் நிறுத்தி வைக்க வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக விவசாயத்தை லாபமான தொழிலாக மாற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க வல்லுனர் குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT