Published : 11 Jan 2017 03:00 PM
Last Updated : 11 Jan 2017 03:00 PM
பண மதிப்பு நீக்கத்தால் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக கரும்புகளை வாங்க வியாபாரிகள் தயங்குகின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விற்பனையும் மந்தமாகவே உள்ளது. பணத்தட்டுப்பாடு நீடிப்பதே இதற்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொங்கல் பண்டிகை என்றாலே அனைவரது நினைவிலும் கூட கரும்பு இனிக்கும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பொங்கல் விற்பனைக்காக மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு குறைந்த அளவே கரும்பு கட்டுகள் வந்துள்ளன.
விளைச்சல் குறைவு
கடந்த ஆண்டு தொடர் மழை காரணமாக கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கடும் வறட்சியால் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களிடம் பணப்புழக்கம் குறைவு காரணமாக, தோட்டங்களில் இருந்து கரும்புகளை மொத்தமாக வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தூத்துக்குடியை சேர்ந்த கரும்பு மொத்த வியாபாரி சி.முருகன் கூறியதாவது:
வறட்சியால் கிணற்றுப் பாசனத்தில் மட்டுமே ஓரளவுக்கு கரும்பு விளைந்துள்ளது. கடந்த ஆண்டு 15 எண்ணம் கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ. 350-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.400-க்கும், ஒரு கரும்பு தரத்துக்கேற்ப ரூ.30 முதல் ரூ.50 வரையும் விற்கப்படுகிறது.
வழக்கமாக பொங்கலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே தோட்டங்களில் இருந்து நேரடியாக கரும்புக் கட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்வேன். இந்த ஆண்டு மதுரை மேலூரில் இருந்து நேற்று தான் கரும்புகளை வாங்கியுள்ளேன்.
விற்பனை மந்தம்
வழக்கமாக இந்த காலக் கட்டத்தில் 5 லாரி லோடுகள் வரை கரும்புகள் விற்பனையாகும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை 1 லோடு கூட விற்கவில்லை. கடந்த ஆண்டு 27 லோடு கரும்புகளை வாங்கி வந்து விற்றேன். தற்போது 12 லோடுகளுக்கு மட்டுமே ஆர்டர் கொடுத்துள்ளேன்.
என்னைப் போலவே மற்ற வியாபாரிகளும் கரும்பு வாங்க தயங்குகின்றனர். பணத்தட்டுப் பாடால் விற்பனை மந்தமாக இருப்பதே இதற்கு காரணம். இனி வரும் 3 நாட்களும் ஓரளவு விற்பனை இருக்கும் என எதிர்பார்க் கிறோம்’’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT