Published : 04 Feb 2017 12:08 PM
Last Updated : 04 Feb 2017 12:08 PM

நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் 6 ஆண்டுகளில் 36 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை

அருவங்காடு காணிக்கராஜ் நகரில் ஆர்.டி.ஓ. டிரஸ்ட் கட்டிட வளாகத்தில், நாடு முழுவதும் உள்ள கால்நடை மருத்துவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

சர்வதேச அளவிலான கால்நடை மருத்துவ சேவை என்ற பெயரில் மருத்துவப் பயிற்சி, அதற்கான பெரிய அரங்கம், சமையல் அறை, அறுவைசிகிச்சை மையம், 25 நாய்களை தனித்தனியே அடைப்பதற்கான அறைகள், கால்நடைத் துறை மருத்துவர்களுக்கான நூலகம், பயிற்சி வகுப்பறைகள் ஆகியவற்றுடன் செயல்படும் இந்த மையத்தில் 15 நாட்கள் நடக்கும் பயிற்சியில், 10 முதல் 12 கால்நடை மருத்துவர்கள் வரை பயிற்சி பெறுகிறார்கள். இவ்வாறு கடந்த 6 ஆண்டுகளில் 126 பயிற்சி முகாம்கள் நடந்துள்ளன.

1,500 கால்நடை மருத்துவர்கள்

நாடு முழுவதும் இருந்து 1,500 கால்நடை மருத்துவர்கள் இங்கு தங்கி பயிற்சி பெற்றுள்ளனர். நாய்களுக்கான, குறிப்பாக தெரு நாய்களுக்கான கருத்தடை அறுவைசிகிச்சை செய்வது குறித்து இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தெரு நாய்கள் பிடித்து வரப்பட்டு, கருத்தடை அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்ந்து இங்கு பயிற்சி வகுப்புகள் நடப்பதால், நீலகிரி மாவட்டத்தில் கருத்தடை செய்யப்படாத நாய்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள் இந்தப் பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து மைய நிர்வாகியும், இபான் அமைப்பு தலைவருமான நைஜில் ஓட்டர், கால்நடை மருத்துவர் இலோனா ஓட்டர் ஆகியோர் கூறியதாவது:

நாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை மேற்கொள்ளும்போது, அறுவைசிகிச்சையை எப்படி செய்ய வேண்டும், மனிதர்களுக்கோ, நாய்க்கோ நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்காக, எத்தகைய விதிமுறைகளைப் பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்தும், சர்வதேச தரத்திலான சிகிச்சை முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கிறோம்.

அறுவைசிகிச்சையின்போது பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள், நாய்களைத் தொடும் முறை, உள்தையல் போடும் முறை, அறுவைசிகிச்சை முடிந்த பின்னர் நாய்களைப் பாதுகாக்கும் முறை, உள்ளிட்ட பல்வேறு செயல்விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

இந்த விஷயத்தில், நம் நாட்டு கால்நடை மருத்துவர்கள் பெரும்பாலானோர் ஆரம்ப நிலையிலேயே உள்னர். இங்கு பயிற்சி பெற்ற பின்னர், அவர்களுக்கு பல விஷயங்கள் தெரிகின்றன.

இங்கிலாந்தில் உள்ள சர்வதேச கால்நடை மருத்துவ சேவை அமைப்பைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் லூயிக் கேம்ப்ளின் நீலகிரியில் தங்கி, நாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை செய்தார். அவரது சேவையில் நானும் பங்கேற்றேன். அவர் எங்கள் இபான் அமைப்பையும், விபத்தில் பாதிக்கப்பட்ட விலங்குகளைப் பராமரிப்பதையும் அவர் பார்வையிட்டார். “இங்கு ஒரு மையத்தை உருவாக்கி, நாய்களுக்கு கருத்தடை அறுவை சிக்சை செய்யும் பணியை மேற்கொள்ளலாம்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, அருவங்காட்டில் வாடகைக் கட்டிடத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நாய்களுக்கான அறுவைசிகிச்சை செய்வதுடன், பயிற்சியும் அளிக்கிறோம். கருத்தடைக்கான சாதனங்களை அளித்து, செலவுகளை அறக்கட்டளையே ஏற்றுக்கொள்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் கால்நடை மருத்துவர்கள், முன்கூட்டியே எங்களிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இதுவரை நடந்த 126 முகாம்களில் சுமார் 1,500 கால்நடை மருத்துவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது, ஜூன், ஜூலை மாதம் வரை பயிற்சி பெறுவதற்கு டாக்டர்கள், முன்பதிவு செய்துள்ளனர். பதிவுக் கட்டணமாக ரூ.1,500 பெறப்படுகிறது. டாக்டர்களுடன், நாய் பிடிப்பதற்கான உதவியாளர்களும் வரலாம்.

அவர்களுக்கு 15 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். இவர்களின் பயிற்சிக்கு ஒரு நாளைக்கு 22 நாய்கள் வரை தேவைப்படுகிறது. அதைத் தேடுவதே முக்கியப் பணியாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கருத்தடை செய்யப்படாத தெரு நாய்களே இல்லை. வெறி நாய்க்கடி நோய் தாக்கியவர்களும் இல்லை என்ற நிலை எட்டப்பட்டுள்ளது.

நாய்கள் கிடைக்கவில்லை?

தற்போது கருத்தடை அறுவைசிகிச்சைக்கு நாய்கள் கிடைக்காமல், நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதிக்குச் சென்று, நாய்களைப் பிடித்து வருகிறோம். அதற்கு அறுவைசிகிச்சை செய்த 3 நாட்கள் கழித்து, அதே இடத்தில் கொண்டுபோய் விட்டுவிடுகிறோம். இதுவரை 35 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றனர்.

நைஜில் ஓட்டர் ஏற்கெனவே கோவாவில் 6 மாதம் தங்கியிருந்து, 50 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை செய்துள்ளார்.

இவர்கள் வைத்துள்ள நவீன நாய் அறுவைசிகிச்சை வாகனம் மூலம் தமிழகம் மட்டுமின்றி, டெல்லி, மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, கோவா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்குச் சென்று, ஆயிரக்கணக்கான தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ‘வெட்ஸ் பியான்ட் பார்டர்ஸ்’ என்ற அமைப்பு, டெல்லியில் கால்நடை மருத்துவர்களுக்கான பயிற்சி முகாமை 7 மாதங்கள் மட்டுமே நடத்தியுள்ளது. ஆனால், நீலகிரியில் 6 ஆண்டுகளாக இந்த பயிற்சி முகாம் தொடர்ந்து நடப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x