Published : 27 Apr 2017 11:34 AM
Last Updated : 27 Apr 2017 11:34 AM

நீர் ஆவியாதலைத் தடுக்க மேற்கொண்ட தெர்மோகோல் திட்டம் சரியானதா?- இந்திய அறிவியல் விஞ்ஞானி பேட்டி

தேனி மாவட்டத்தில் இருக்கும் வைகை அணையில் இருந்து தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மோகோலை மிதக்க விடும் திட்டம் சோதனை அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் சுமார் 300 தெர்மாகோல் அட்டைகளை டேப்களை வைத்து ஒட்டி அணையில் மிதக்கவிட்டனர்.

அணைப் பகுதியில் வீசிய பலத்த காற்றால் மிதக்கவிடப்பட்ட தெர்மோகோல்கள் ஒரு மணி நேரத்தில் கரை ஒதுங்கின. நீர் ஆவியாதலைத் தடுக்க இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியா?

இதுகுறித்து அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேசினோம்.

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீர்நிலைகளில் உள்ள நீர் கொதிநிலையை அடையும்போது ஆவியாவதில்லை. அதற்கு முன்னதாகவே ஆகிறது. இதற்கு திட, திரவ, வாயு நிலைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பார்வையாளர் அரங்கில் ரசிகர்கள் அமர்ந்திருக்கின்றனர். போட்டி தொடங்கப் போகிறது. அவர்கள் லேசாக கால்களை நீட்டியபடியோ, கைகளை அசைத்தபடியோ இருக்கலாம். இது திட நிலை, அதாவது மூலக்கூறுகள் மிகக் குறைந்த இயக்கத்தில் இருப்பது.

அடுத்து இடைவேளையின்போது சில ரசிகர்கள் எழுந்து வெளியே செல்வர்; சிலர் கழிப்பறைக்குச் செல்லலாம். அது ஓரளவு இயக்கத்துடன் கூடிய திரவ நிலை. வாயு நிலையில் பெரும்பாலான மூலக்கூறுகள் இயக்க நிலையில் இருக்கும். உதாரணத்துக்கு கடைசி பால் சிக்ஸரின்போது அனைத்து ரசிகர்களும் எழுந்து, ஆடிப்பாடி ஆரவாரம் செய்வது.

இந்த நிலையில்தான் நீர் ஆவியாகிறது. குறிப்பாக நீர்நிலைகளின் மேற்பரப்பில் இருக்கும் நீர், அதன் உச்சபட்ச இயக்க ஆற்றலில் வாயு நிலையை அடைந்து ஆவியாகிவிடுகிறது. இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். மூலக்கூறுகள் இயங்கும் திசையும் முக்கியம். அவை நீருக்கு மேலே, காற்றை நோக்கிச் சென்றால்தான் வாயு நிலைக்குச் செல்கிறது. அவை நீருக்கு உள்ளேயே பயணித்தால் நீர் ஆவியாவதில்லை.

தெர்மாகோல் கொண்டு நீர்நிலைகளை மூடும் திட்டம் சரியானதா?

இல்லை. இந்திய நீர் வாரியம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தெர்மோகோல், கடுகு எண்ணெய் கொண்டு நீர்நிலைகளை மூடும் திட்டங்கள் சாத்தியமற்றவை என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளது. பெரிய அளவிலான நீர்நிலைகளில் அவற்றைப் பயன்படுத்த முடியாது.

எனில் சிறிய அளவிலான குளங்கள், தேக்கங்களில் தெர்மோகோல்களைப் பயன்படுத்தலாமா?

குளமே பெரிய அளவிலான நீர்நிலைதான். நீர்நிலைகளில் தெர்மோகோல் பயன்பாடு சாத்தியமில்லை. வேண்டுமெனில் வீட்டு மொட்டை மாடி தண்ணீர்த் தொட்டி, ப்ரிஜ் ஆகியவற்றில் தெர்மோகோல்களைப் பயன்படுத்தலாம்.

தெர்மோகோலின் பயன் என்ன? அதுஎப்படி உருவாக்கப்படுகிறது?

பாலிஸ்டைரீன் தான் தெர்மாகோல் எனக் கூறப்படுகிறது. மண்ணில் மக்காத மற்றும் அழிக்க முடியாத பிளாஸ்டிக் வகையிலான பொருட்களில் இதுவும் ஒன்று. இதன் துகள்கள் சுவாசக் குழாய்க்குள் சென்றாலோ, தெர்மாகோல் எரியும் புகையை சுவாசித்தாலோ கடுமையான உடல்நலக் கேடுகள் ஏற்படும்.

தெர்மோகோல் ஒரு குறை வெப்ப கடத்தி. அதனால் வெளிப்புற வெப்பம் உள்ளே செல்லாமல் அரணாக இருக்கிறது. அதனாலேயே ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களில் தெர்மோகோல் பயன்படுத்தப்படுகிறது.

முன்னாட்களில் நீர் ஆவியாதலைத் தடுக்க என்ன வழிமுறைகளைப் பின்பற்றினர்?

அதற்கான தேவையே அப்போது இருக்கவில்லை. பழங்காலத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல மக்கள் தொகை பெருகியது. வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தால் சராசரி ஆயுளும் அதிகரித்தது. இதனால் தற்போது நீரின் தேவை அதிகமாகியுள்ளது. அதனால்தான் நீர் ஆவியாதலைத் தடுத்து, நீரைச் சேமிக்க முயல்கிறோம்.

குஜராத்தின் நர்மதா கால்வாயின் மேல் போர்த்தப்பட்ட சோலார் தகடுகள் திட்டம் எப்படிப்பட்டது?

அது நல்ல திட்டம்தான். அறிவுபூர்வமானதும்கூட. ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் ஆராய வேண்டும். பொதுவாக நம் நாட்டில் நீர்நிலைகளை மூடுவதில்லை. சூரிய ஒளி வெளியிடும் புற ஊதாக் கதிர்கள் நீரில் இருக்கும் கிருமிகளை அழித்துவிடும் என்ற எண்ணத்தில் அவ்வாறு செய்தனர்.

என்னென்ன வழிகளில் நீர் ஆவியாதலைத் தடுக்க முடியும்?

நீர் 3 காரணிகளால் ஆவியாகிறது.

1. காற்றுக்கும் தண்ணீருக்கும் இடையேயான வெப்பநிலை வேறுபாடு (நேர்த்தகவில்)

2. காற்றின் ஈரப்பதம். (நேர்த்தகவில்)

3. காற்றின் சலனம். காற்று வேகமாக அடிக்கும்போது ஆவியாதல் அதிகமாக இருக்கும். முதல் இரண்டு காரணிகளையும் நாம் மாற்ற முடியாது. காற்றின் சலனத்தை மட்டுப்படுத்த சில வழிமுறைகள் இருக்கின்றன.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதலில் நீர்நிலைகளைச் சுற்றிலும் புதர்ச்செடிகளை (bush) வளர்க்க வேண்டும். அதற்கு அடுத்த அடுக்கில் தூறுச்செடிகளை (shrub- சற்றே நீண்ட புதர்) உருவாக்க வேண்டும். இவை காற்றைத் தடுக்கும் அரணாகச் செயல்படும். அதற்கடுத்த அடுக்கில் பெரிய மரங்களை வளர்க்க வேண்டும், அவை வீசும் காற்றின் வேகத்தை மட்டுப்படுத்தும். இதன்மூலம் நீரின் மேற்பரப்பு ஆவியாதலைப் பெருமளவு தடுக்கலாம்.

ஆனால் இது நமக்கு குறிப்பாக வெப்ப மண்டலப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x