Published : 09 Mar 2017 10:21 AM
Last Updated : 09 Mar 2017 10:21 AM

உள்ளாட்சி: நாளை நம் குழந்தைகளுக்கு என்ன தரப்போகிறோம்?

விவசாய நிலங்களை வீட்டு மனை களாக மாற்றிக் காட்டப்பட்ட நிலப் பயன்பாட்டு அங்கீகார வரைபடத்தை நேற்று பார்த்தீர்கள். இதுபோன்ற முறைகேடுகள் அரசல்புரசலாக நடப்பவை அல்ல. தமிழகம் முழு வதும் பகிரங்கமாக நடக்கின்றன. ‘அங்கீ கரிக்கப்பட்ட வீட்டு மனை வேண்டுமா? அங்கீகரிக்கப்படாத வீட்டு மனை வேண்டுமா?’ என்கிற கேள்வி எல்லாம் இன்றைய ரியல் எஸ்டேட் தொழிலில் மிக மிக சகஜம்.

இதன் விளைவு களைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை. இதுபோன்ற முறைகேடுகளால் கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கை இன் றைக்கு வேண்டுமானால் வசதியாக தெரியலாம். ஆனால், நமது குழந்தைகளை நாளைக்கு நாம் சோற்றுக்கும் தண்ணீருக்கும் அல்லாட விடப்போ கிறோம் என்பதுதான் உண்மை!

குற்றங்களே சட்டங்களாகும் அபத்தம்!

இதைத்தான் வழக்கறிஞர் ‘யானை’ ராஜேந்திரன், ‘தமிழகம் முழுவதும் விளைநிலங்கள் சட்ட விரோத வீட்டு மனைகளாக மாற்றப்படுகின்றன. விவசாயம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது’ என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரியல் எஸ்டேட் தரப்பினர் அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய பல்வேறு முயற்சிகளை செய்தனர். தமிழக அரசும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு ஆதரவாக ஒரு அரசாணை வெளியிட்டது.

அதில், “2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்னதாக விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்து கொள்ளலாம். ஆனால், அதற்கு பிறகு விளை நிலங்களை சட்ட விரோத வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்தால் அதற்கு பத்திரப் பதிவு செய்ய முடியாது” என்றது. 2016, அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்ய லாம் என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம்தான் இந்த அரசாணையும். இப்படி ஒரு அபத்தமான அரசாணையை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது!

தொடர்ந்து நீதிமன்றம் தரிசு மற்றும் விளை நிலங்களை முறையாக வகைப்படுத்தியும், சட்ட விரோத வீட்டு மனைகளை வரையறை செய் வது குறித்தும் ஒருங்கிணைந்த திட்டத்தை வரும் மார்ச் 28-க்குள் உருவாக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அரசு அதிகாரிகள் ஒரு கமிட்டியை அமைத்து அனைத்து அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளையும் சட்டப்பூர்வமாக்க முயன்று வருவதாகவே தெரிகிறது.

அவர்களுக்கு இது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கெனவே 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு அரசாணை மூலம் தமிழகத்தின் அனைத்து அங்கீ காரமில்லாத வீட்டு மனைகளையும் சட்டப்பூர்வமாக்கிய அனுபவம் அவர்க ளுக்கு உண்டு. குற்றங்களையே சட்டமாக்கும் வல்லமையை பெற்றிருக்கிறார்கள் அவர்கள். விதிமுறை மீறல்களின் மீதே கட்டமைக்கப்படுகின்றன சட்டங்கள்.

சென்னையின் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிக்கப்பட்டது இப்படித் தான். தமிழகத்தில் பல ஏரிகள் காணாமல் போனதும் இப்படித்தான். இதற்கான அத்தனை பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளையே சாரும். உண்மையில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பை தாண்டி ஒரு மனையின் அங்கீகாரத்தைக்கூட பெற முடியாது.

எப்படி நடக்கிறது முறைகேடுகள்?

விற்பனைக்காக மனைகளைப் பிரிக்கும்போது 10 சதவீதம் நிலத்தை பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்க வேண்டும். சாலைகளுக்கு இடம் விட வேண்டும். ஒவ்வொரு மனைக்கும் குறிப்பிட்ட இடைவெளி வேண்டும். விவசாய நிலத்தில் மனை பிரிக்கக் கூடாது. நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது. நிலத்துக்கு மேலாக உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லக் கூடாது என்று நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. இந்த விதிமுறைகள் ஒவ்வொன்றும் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலானவை. வாழ்வாதாரங் களின் பாதுகாப்பு தொடர்பிலானவை. இதன்படி பார்த்தால் ஒரு ஏக்கருக்கு சுமார் 40 சதவீதம் அளவு பொதுப் பயன்பாட்டுக்கு தர வேண்டியிருக்கும். தவிர, மனைப் பிரிப்பு அங்கீகாரத்துக்கு அனுப்பும்போது அரசு துறைகளின் ஒவ்வொரு படிநிலைக்கும் படியளக்க வேண்டும்.

இதனால் பலரும் நகர ஊரமைப் புத் துறையிடம் அங்கீகாரம் பெறுவ தில்லை. பல இடங்களில் வெளிப்படை யாக ‘இந்த மனைக்கு அங்கீகாரம் கிடையாது. ஆனால், விரைவில் அரசு இதனை சட்டப்பூர்வமாக்கிவிடும்’ என்றுச் சொல்லியே மனைகளை விற்கிறார்கள். பல இடங்களில் கிராமப் பஞ்சாயத்துக்களின் தீர்மான நகலையும் அதன் எண்ணையும் காட்டி அதனை மனையின் அங்கீ காரம் என்கின்றனர். வீட்டு மனை வாங்கும் பலரும் இது தெரியாமல் ஏமாறுகின்றனர்.

ஒன்றை கவனியுங்கள், கிராமப் பஞ்சாயத்தால், ஒரு மனையை அங்கீகரிக்கும்படி நகர ஊரமைப்புத் துறையிடம் பரிந் துரைக்க மட்டுமே முடியும். பரிந்துரை ஒருபோதும் அங்கீகாரம் ஆகிவிடாது. அதேசமயம் கிராமப் பஞ்சாயத்து பரிந்துரைக்காமல் எந்த ஒரு துறையும் அங்கீகாரம் அளித்துவிட முடியாது.

அடுக்கு மாடிகளாகும் வயல்வெளிகள்!

இதுபோன்ற முறைகேடுகள் மூலம் தான் தன்னை சுற்றியுள்ள கிராமங் களை படிப்படியாக அழித்து சென்னை என்னும் பெருநகரம் பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது. சென்னையைச் சுற்றி நாவலூர், வண்டலூர், சிறுசேரி, தாழம்பூர், படூர், கேளம்பாக்கம் என சின்னஞ்சிறு கிராமங்களில் எல்லாம் 30-35 தளங்கள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் வளர்ந்து நிற்கின்றன. ஒவ்வொரு குடியிருப்பிலும் சுமார் இரண்டாயிரம் வீடுகள் இருக்கின்றன.

வயல்வெளிகளின் பின்னணியில் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ந்து நிற்கின்றன. நெல்லும் காய்கறியும் கீரையும் விளைய வேண்டிய கிராமங்களில் மென்பொருள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவை என்ன? இணைய தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட சூழலில் எங்கிருந்து வேண்டு மானாலும் செய்ய வேண்டிய வேலையை ஏன் சதுப்பு நிலங்களை அழித்து, நீர் நிலைகளை அழித்து, விவசாயத்தை அழித்து செய்ய வேண்டும்?

அடிப்படையாக ஒரு விஷயம். மனைப் பிரிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. பொதுவாக குடி யிருப்புப் பகுதிகளைவிட தாழ்வான பகுதிகளில்தான் விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் இருந்தன. வெள்ளத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், வெள்ள நீரை நீர் நிலைகளில் சேமிக்கவும் நமது முன்னோர்கள் செய்த பாரம்பரிய கட்டமைப்பு இது. அப்படியான மேட்டு நிலத்தில் இருந்த குடியிருப்புகள் நத்தம் என்றழைக்கப்பட்டன. ஆனால், நத்தத்தை தாண்டி குடியிருப்புகளை விரிவுப்படுத்தும்போது தாழ்வான பகுதிகள் மேடாக்கப்பட்டன. முறை யற்ற மனை பிரிப்புகளால் சாலை களையும் கால்வாய்களையும் அடைத் தார்கள். இது இயல்பான நீரோட் டத்தை பாதித்தது. நூற்றுக்கணக்கான உயிர்களை பலி கொண்ட சென்னை வெள்ளமும் கடலூர் வெள்ளமும் ஏற் பட்டது இப்படிதான். உள்ளாட்சி என்னும் அமைப்பில் நாம் ஒவ்வொரு வரும் அக்கறை கொள்ளாததே மேற்கண்ட அத்தனை சீரழிவுக்கும் காரணம்.

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x