Published : 17 Apr 2014 11:09 AM
Last Updated : 17 Apr 2014 11:09 AM
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேரும் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான கால அவகாசம் 15 நாள்களாக நீட்டிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஏ.நாராயணன் மனு தாக்கல் செய்திருந்தார். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.
இந்த சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர விரும்பும் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் ஒவ்வோர் ஆண்டும் மே 3-ம் தேதியிலிருந்து விண்ணப்பங்களைப் பெற்று, மே 9-ம் தேதிக்குள் நிரப்பி அவற்றை சமர்ப்பித்திட வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதற்கிடையே கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர தகுதியிருந்தும் வெறும் 7 நாள்கள் மட்டுமே பெற்றோர்களுக்கு அவகாசம் தரும் இந்த அரசாணையின் காரணமாக கடந்த கல்வியாண்டில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 69 சதவீத மாணவர்கள் பள்ளிகளில் சேர முடியாமல் தங்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். இது சட்ட விரோதமானது. ஆகவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று நாராயணன் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் புதன்கிழமை அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த ஏழை பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்பதே கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் பிரதான நோக்கம். இந்நிலையில் இந்த சட்டத்தின் கீழ் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு பெற்றோருக்கு ஒரு வாரம் மட்டும் வாய்ப்பு அளிப்பது என்பது மிகவும் குறைந்த கால அவகாசமாகும். இந்த கால அவகாசம் உத்தேசமானது மட்டுமே என அரசுத் தரப்பில் கூறியுள்ளனர். ஆகவே, கால அவகாசத்தை 15 நாள்களாக நீட்டிப்பது சரியானதாக இருக்கும்.
ஒவ்வோர் ஆண்டும் மே 3-ம் தேதி முதல் மே 9-ம் தேதி வரை 7 நாள்களுக்கு மட்டும் என வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மே 3-ம் தேதி முதல் மே 18-ம் தேதி வரை 15 நாள்களுக்கு அவகாசம் அளிக்கும் வகையில் அரசு கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT