Published : 17 Oct 2013 12:17 PM
Last Updated : 17 Oct 2013 12:17 PM
அரிதான இருதய அறுவைச் சிகிச்சையை 14 வயது சிறுவனுக்குச் செய்து சாதனை படைத்திருக்கிறது ராஜீவ் காந்திஅரசு பொது மருத்துவமனை.
விழுப்புரம் மாவட்டம் பரிதிபுரத்தைச் சேர்ந்த ஏழுமலை, சாந்தி தம்பதியின் மகன் சந்திரன் (14). அவருக்குப் பிறவியிலேயே இதயத்தின் கீழ்அறையின் இரண்டு வென்டிரிகிள் நடுவில் துவாரம் இருந்தது. அசுத்த ரத்தம், சுத்த ரத்தத்தோடு கலந்து, நுரையீரலுக்குச் சரியான அளவில் ரத்த ஓட்டம் செல்லாமல் இருந்தது. இதனால் அவருக்கு மூச்சுத் திணறல், உடல் நீலம் பாரித்தல் போன்ற பாதிப்புகள் உண்டாகின.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி சந்திரனை அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. சந்திரனுக்கு, ரத்ததில் ஹீமோகுளோபின் அளவு 18.5gm (கிராம்) இருந்தது. இயல்பாக, 13.5gm (கிராம்) ஹீமோகுளோபின் இருந்தால் போதுமானது. சந்திரனுக்கு மூளையில் சீழ் கட்டுதல், ஸ்டிரோக் போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
பரிசோதனைகளுக்குப் பின்னர், அக்டோபர் 5-ம் தேதி சந்திரனுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இருதய அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் மருத்துவர் கணேசன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு சுமார் ஐந்தரை மணி நேரத்தில் இந்த சிகிச்சையைச் செய்தது.
சந்திரனின் இருதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முயன்ற போது, அவரது வலது வென்டிரிகிளில், அயோட்டா, பல்மோனரி ஆர்டரி (aorta,pulmonary artery) இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இது, மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. இடது வென்டிரிகிளில் உருவாகும் சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை அயோட்டா எடுத்துச் செல்லும், வலது வென்டிரிகிளில் உருவாகும் அசுத்த ரத்ததை, பல்மோனரி ஆர்டரி நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும். அறுவைச் சிகிச்சையின் போது அசுத்த ரத்தம், இரண்டு நுரையீரல்களுக்கும் அனுப்பப்பட்டு, சுத்திகரித்தபின் மீண்டும் இருதயத்துக்கு அனுப்பப்பட்டது என மருத்துவர் கணேசன் அறுவை சிகிச்சை முறையை விளக்கினார்.
இது குறித்து மருத்துவ மனையின் முதன்மை மருத்துவர் கனகசபை பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: "இந்த வகையான இருதய நோய் அரிதிலும் அரிதானது. அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்தால், மூளையில் சீழ் கட்டுதல், இரத்த வாந்தி போன்ற பின்விளைவுகள் ஏற்பட்டு இவரின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.
இந்த அறுவைச் சிகிச்சை, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டது. இத்தகைய அறுவைச் சிகிச்சை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இங்குதான் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது” என்றார். இதே அறுவைச் சிகிச்சைக்கு, தனியார் மருத்துவமனையில் ரூ.4 லட்சம் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT