Published : 26 May 2017 08:00 AM
Last Updated : 26 May 2017 08:00 AM

தமிழக தாய்மார்கள் வீதிக்கு வந்து போராடுவது ஏன்?

ஒருவழியாக மதுக்கடைகளுக்கான மாற்று இடங்களை அடையாளம் கண்டுவருகிறது டாஸ்மாக் நிர்வாகம். ஊருக்கு வெளியே சுடுகாட்டிலும் சுடுகாட்டை ஒட்டிய பகுதி யிலும் கடையை அமைக்கிறார்கள். காட்பாடி கரசமங்கலம் அருகே சுடுகாட்டை ஒட்டி மதுக்கடை வைக்கப் பட்டிருக்கிறது. வேலூர் கணியம்பாடி சுடுகாட்டிலும் மதுக்கடை வைத்திருக்கி றார்கள். மேற்கண்டவை உதாரணங்கள் மட்டுமே. ஊருக்கு நான்கு கடை களாவது சுடுகாட்டை ஒட்டி வைக்கப் பட்டிருக்கின்றன. இனி குடியால் சாகும் குடிநோயாளிகளை அடக்கம் செய்ய சிரமப்பட்டு தூக்கிச் செல்லத் தேவையில்லை. மதுக்கடைகளை இடம் மாற்றும் விவகாரத்தில் தமிழகம் கிட்டத் தட்ட போர்க்களம் போல காட்சியளிக் கிறது. குறிப்பாக, பெண்கள் மதுக்கடை களை ஆவேசமாக அடித்து நொறுக்குகி றார்கள். மதுக்கடைகள் தொடர்பான போராட்டங்களில் முன்பு எப்போதும் இல்லாத வகையிலான எதிர்ப்புடன் திரண்டு நிற்கிறார்கள் மக்கள். ஆனாலும், மக்களின் உணர்வுகள் அரசால் மதிக்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஆய்வுக் கூட்டம் நடந்ததா?

“நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக மாநிலத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர், தீர்ப்பு வெளியான நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். பின்பு 15 நாட்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆலோசனை நடத்தி இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.” - நெடுஞ் சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற உத்தரவின் ஆறாவது வழி காட்டுதல் இது. தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் இணைந்து மேற்கண்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும். தீர்ப்பு வெளியாகி ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்று தெரியவில்லை.

என்ன செய்கிறது காவல் துறை?

திருப்பூரில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து மதுக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், சமீபத்தில் வேலூர் அருகே அழிஞ்சிகுப்பத்தில் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் 18 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு, 12 பேர் கைது செய்யப்பட்டார்கள். காட்பாடி அருகே அருப்புமேட்டில் நடந்த போராட்டத்தில் 30 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சிங்காநல்லூரில் நெடுஞ்சாலையில் மூடிய கடையின் பின்பக்க கதவை திறந்து வைத்து மது விற்றார்கள். அந்த கடையும் சூறையாடப்பட்டுள்ளது. 15-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு மிக அருகில் இருக்கிறது டாஸ்மாக் மதுக்கடை. அந்தக் கடையை அகற்றக் கோரி தினமும் போராடுகிறார்கள் மக்கள். அவர்களையும் காவல் துறை மிரட்டுவதாக புகார்கள் உள்ளன. இப்படி நிறைய உதாரணங்கள்.

இதுவரை நடந்த போராட்டங்கள், தொடரப்பட்ட வழக்குகள், மூடப்பட்ட கடைகள் குறித்து அரசு தரப்பிடம் உயர் நீதிமன்றம் புள்ளிவிவரங்களை கேட்டுள்ளது. ஆனால், போராட்டங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் அரசு தரப்பில் அதனை தாக்கல் செய்ய தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் இதுவரை போராட்டங்கள் காரணமாக தமிழகம் முழுவதும் 41 மதுக் கடைகள் மூடப்பட்டிருப்பதாக தெரிகிறது. சுமார் 1000-க்கும் அதிகமான போராட்டங்கள் நடந்திருக்கலாம். சுமார் 300 இடங்களில் மதுக்கடைகள் மீது மக்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். சுமார் 700 பேர் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. இவ்வளவையும் மீறிதான் வீதிக்கு வருகிறார்கள் மக்கள்.

ஏன் போராடுகிறார்கள் தாய்மார்கள்?

மதுவுக்கு எதிராக போராடும் தாய் மார்களில் பெரும்பாலோனார் தந்தை, கணவர், மகன், மருமகன், பேரன் என தனது உறவுகளில் எவரோ ஒருவர் வகையிலாவது குடிநோய் தொடர்பாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று வீதிக்கு வந்து போராடுவது அந்தத் தாய்மார்கள்தான்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவிளாங் கோடு அருகே வசிக்கும் 80 வயதைத் தாண்டிய கன்னியம்மாள், திண்ணையில் அலங்கோலமாக படுத்துக்கிடக்கும் இளைஞனை பார்த்து நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுகிறார்.

“குடியால் என் புருஷனும் செத்துட் டான், மகனும் செத்துட்டான், மருமகனும் செத்துட்டான், இதோ பேரனும் குடிக்கு அடிமையாகிட்டான்...” என்று கதறுகிறார். திருநெல்வேலி ராதாபுரத்தைச் சேர்ந்த லட்சுமிக்கு வயது 24. ஐந்தரை மாதம் கர்ப்பம். இரு மாதங்களுக்கு முன்பு குடியால் கணவர் இறந்துவிட்டார்.

தமிழகத்தில் குறைந்தது சுமார் இரண்டரை கோடி குடிநோயாளிகள் இருக்கிறார்கள். முன்பெல்லாம் 40, 50 வயதைத் தாண்டியவர்களே குடி நோயால் இறந்தார்கள்.

இன்று 20, 30 வயதுகளை தாண்டி யிராத இளைஞர்களும் முற்றிய குடிநோயால் இறக்கிறார்கள். இவர்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களே இன்று வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

திருப்பூரில் அடிவாங்கிய ஈஸ்வரியா கட்டும், வேலூரில் கொத்தாக முடியை பிடித்து இழுத்துச் செல்லப்பட்ட தாய் மார்களாகட்டும் ஒவ்வொருவரின் பின்புலத்திலும் மதுவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு சோகம் இருக்கும். அதுவே அவர்களை வீதிக்கு அழைத்து வந்திருக்கிறது. தமிழக அரசின் வேலை போராட்டங்களை ஒடுக்குவதற்குப் பதிலாக, புதிதாக மதுக்கடைகளை திறப்பதை நிறுத்துவதேயாகும். அதுவே பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x