Published : 02 Jan 2017 03:44 PM
Last Updated : 02 Jan 2017 03:44 PM
தக்காளி வரத்து அதிகரித்து உரிய விலை கிடைக்காத நிலையிலும் கிணத்துக்கடவு அரசு குளிர்பதனக் கிடங்கை விவசாயிகள் கண்டு கொள்ளாத நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் அதிக அளவு தக்காளி வரத்து உள்ள சந்தையாக கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் உள்ளது. கிணத்துக்கடவை சுற்றியுள்ள அதைச் சுற்றியுள்ள வடக்கிபாளையம், வீரப்பனூர், வடபுதூர், கோதாவடி, நெகமம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து இங்கே தினசரி 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பெட்டிகள் (ஒரு பெட்டிக்கு 14 கிலோ) வரை தக்காளி வரத்து இருந்து வருகிறது.
உள்ளூர் வியபாரிகள் மட்டுமல்லாது தமிழக, கேரள வியாபாரிகள் இவற்றை வாங்கிச் செல்கிறார்கள். தக்காளி விலை வரத்து குறையும்போது எகிறுவதும், வரத்து அதிகமாகும்போது பறிப்புக்கூலிக்கு கூட விலை கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடுவதுமான நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. விலை மிகவும் குறையும் நேரங்களில் தக்காளியை கூடை, கூடையாய் சாலையிலும், சுடுகாட்டிலும், சாக்கடையிலும், குப்பை மேட்டிலும் கொட்டிச் செல்வதும், அதையொட்டி விவசாயிகள் போராட்டமும் ஏராளமாக நடந்துள்ளது.
உரிய விலை தக்காளிக்கு கிடைக்காத நிலையில் அதை பதப்படுத்தி வைத்து விலை உள்ளபோது எடுத்து விற்கும் வசதியுடன் கிணத்துக்கடவில் தக்காளி குளிர்பதனக் கிடங்கை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதை ஏற்ற தமிழக அரசு 2012-2013ம் ஆண்டில் ரூ.2.5 கோடி மதிப்பில் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் வளாகத்தில் கட்டியது.
இதை முதல்வர் சென்னையில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலம் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திறந்து வைத்தார். 'குளிர் பதனக்கிடங்கு விவசாயிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், இக்கிடங்கில், 500 மெட்ரிக் டன் தக்காளி இருப்பு வைக்கும் வசதியுடன் உள்ளது!' என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.
ஓரளவுக்கு தக்காளிக்கு நல்ல விலை கிடைத்த வந்த நிலையில் இதில் விவசாயிகள் யாரும் இருப்பு வைக்கவில்லை. ஆனால் கடந்த சில மாதங்களாகவே தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலை நீடிக்கிறது.
அதிலும் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. என்றாலும் கூட இந்த குளிர்பதனக் கிடங்கில் ஒரு தக்காளிக் கூடையை கூட வைக்க யாரும் முன்வரவில்லை. அதிகாரிகளும் அதைப்பற்றி அக்கறையில்லாமல் பூட்டியே வைத்துள்ளார்கள் என தெரிவிக்கிறார்கள் இந்த மார்க்கெட்டிற்கு வந்து செல்லும் விவசாயிகள்.
(பூட்டிக்கிடக்கும் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக்கிடங்கு.)
இதுகுறித்து இந்த மார்க்கெட்டிற்கு அன்றாடம் வந்து செல்லும் விவசாயிகள் செந்தில்குமார், ராசு ஆகியோர் கூறுகையில் 'நாங்களும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறோம். ஒருநாள், ஒரு தக்காளி கூட இதற்குள் எந்த விவசாயியும் வைத்து எடுத்ததில்லை. அதில் இருப்பு வைத்து எடுக்க என்ன கட்டணம் என்பது கூட இங்குள்ள விவசாயிகளுக்கு தெரியாது!' என்றனர்.
சூலக்கல் விவசாயி பெருமாள்சாமி கூறுகையில், 'இன்னைக்கு ஒரு கூடை தக்காளி ரூ.20 முதல் ரூ.50க்கு போகிறது. எங்க தோட்டத்திலிருந்து தக்காளியை இங்கே மார்க்கெட்டுக்கு கொண்டு வர வேனுக்கு பெட்டிக்கு ரூ.11 கொடுக்கிறோம். மண்டி கமிஷன் ரூ.10 தருகிறோம். ஆள் கூலி, உரம், விதைன்னு கணக்குப்பார்த்தா ஏக்கருக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேலே செலவாகுது. நான் 2 ஏக்கர்ல தக்காளி பயிர் செஞ்சிருக்கேன்.
ஒருநாள் விட்டு ஒரு நாள் 50 முதல் 60 பெட்டிகள் கொண்டு வர்றேன். அதன் மூலம் மொத்தமே ரூ.1500 முதல் ரூ.2000 வரை மட்டுமே கிடைச்சிருக்கு. இப்படி தக்காளி 3 மாதத்துல 40 நாள் பறிப்பு நடக்கும். 40 நாளைக்கு கணக்குப் பார்த்தா மொத்தமே ரூ.80 ஆயிரம் கூட வராது. எப்படிப் பார்த்தாலும் பாதிக்குப் பாதி நஷ்டம்தான். குளிர்பதனக் கிடங்குல வச்சா, திரும்ப எப்ப மார்க்கெட்ல விலை எகிறும். அதுவரைக்கும் கிடங்குல தக்காளி தாங்குமா? அதுக்கு என்ன வாடகை? அதெல்லாம் எந்த வகையிலும் எங்களுக்கு ஒத்து வராது!' எனத் தெரிவித்தார்.
இங்கு மண்டி நடத்தும் மார்க்கெட் வேலுச்சாமி கூறுகையில், 'தக்காளி நல்ல விலை கிடைத்தபோது பெட்டிக்கு ரூ.750 வரை சென்றது. விவசாயிகளுக்கும் ஓரளவு பணம் கிடைத்தது. இப்போது அப்படியில்லை. தினசரி இங்கே கேரளாவிலிருந்து மட்டும் 40 முதல் 50 வியாபாரிகள் வரை வருவது வழக்கம். ஆனால் இன்று 10 பேர் மட்டுமே வந்துள்ளனர். சுமார் 20 ஆயிரம் தக்காளிப் பெட்டிகள் வந்துள்ளன. அதில் பாதியை ஏலம் கேட்கவே ஆளில்லை. மைசூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.1க்கு விற்கிறது. அதேபோல் ஒவ்வொரு ஏரியாவிலும் தக்காளி உற்பத்தி நிறைய ஏற்பட்டுள்ளது. எனவே அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் தேவையை அந்தந்த இடங்களிலேயே பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
அதனால்தான் தக்காளி விலை மிகவும் சரிந்துள்ளது. குளிர்பதனக் கிடங்கில் இதை வைக்க ஒரு பெட்டிக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை கேட்பார்கள். அப்படி வைத்தாலும் அதற்கெல்லாம் ஈடாக எப்போது தக்காளி விலை உயரும் என்று தெரியாது. தவிர தக்காளியை குளிர்பதனக் கிடங்கிலும் ஓரிரு நாட்களுக்கு மேல் வைக்க முடியாது.
அதுமட்டுமல்லாது வருகிற வியபாரிகள் தோட்டத்தில் இன்று பறித்த புத்தம் புதிதான தக்காளியையே வாங்குவார்கள். எனவே விவசாயிகள் யாரும் இந்த குளிர்பதனக் கிடங்கை திரும்பிப் பார்ப்பது கூட கிடையாது. ஒரு வேளை வேறு காய்கறிகள் ஏதாவது வைத்து இதற்குள் முன்பு எடுத்திருப்பார்களோ தெரியாது. யாருமே தக்காளியை வைத்து எடுத்ததில்லை!' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT