Published : 09 Feb 2014 08:48 AM Last Updated : 09 Feb 2014 08:48 AM
தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க ஜெயலலிதா இன்று பசும்பொன் பயணம்
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை பசும்பொன் வருகிறார்.
கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அப்போது முதல்வர் ஜெயலலிதா பசும்பொன் கிராமத்துக்கு வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அப்போது, தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க ஆவன செய்ய வேண்டும் எனப் பொதுமக்களும், கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகளும் வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்ற ஜெயலலிதா, அ.தி.மு.க. சார்பில் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.30 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதா தங்கக் கவசம் அணிவிக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்காக அவர் பகல் 11.35 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 1.30 மணிக்கு பசும்பொன் வருகிறார். பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கிறார்.
அதையடுத்து மதியம் 2 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மதுரை சென்று அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை திரும்புகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடு முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி பசும்பொன்னில் ஹெலிகாப்டர் தளம், காரில் செல்லும் வழித்தடங்களை தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன் பார்வையிட்டார்.
பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கமுதியில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங், டி.ஐ.ஜி.க்கள் அமல்ராஜ் (திருச்சி), அனந்தகுமார் சோமானி (மதுரை), அறிவுச்செல்வம் (திண்டுக்கல்), அதிரடிப்படை எஸ்.பி. கருப்பசாமி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் உடனிருந்தனர்.
முதல்வர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
WRITE A COMMENT