Published : 23 Dec 2013 12:00 AM
Last Updated : 23 Dec 2013 12:00 AM
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் கிறிஸ்துமஸ் குடில்கள், ஸ்டார்கள் விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது.
கொண்டாட்டம்
யேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த தினத்தை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு யேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம். அதேபோல், யேசு பாலன் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவுகூரும் வண்ணம் வீடுகளில் குடில்களும் அமைப்பார்கள்.
விற்பனை தீவிரம்
இந்த குடிலில் யேசு பாலன், அவரது பெற்றோர் சூசையப்பர்-மாதா, சம்மனசுகள், ராஜாக்கள் ஆகியோரின் சொரூபங்கள் வைக்கப்பட்டு இருக்கும். மேலும், ஆடு, மாடுகளின் சிறிய உருவங்களும் அங்கு இடம் பெற்றிருக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் குடில்களை அமைத்து வருகிறார்கள்.
வீடுகளில் ஆங்காங்கே கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் மின்னிய வண்ணம் உள்ளன. சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள பேன்ஸி கடைகளில் குடில்களும் ஸ்டார்களும் குவிந்து கிடக்கின்றன. குடும்பத்தோடு வருகை தந்து குடில்களையும், அவற்றுக்கு தேவையான சொரூபங்களையும் ஸ்டார்களையும் கிறிஸ்த வர்கள் வாங்கிச்செல்கின்றனர். இதனால் கிறிஸ்துமஸ் குடில்கள், ஸ்டார்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
ரூ.5 முதல் 500 வரை
கிறிஸ்துமஸ் குடில்களைப் பொருத்த வரையில், ரூ.150 முதல் ரூ.4000 வரையில் பலதரப்பட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல், ஸ்டார்கள் ரூ.5-லிருந்து ரூ.500 வரை பல வண்ணங்களில் கிடைக்கின்றன. ஆயிரம் ரூபாய் குடில்களும், அதேபோல் 100 ரூபாய் ஸ்டார்களும் அதிக அளவில் விற்பனை ஆவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சென்னை நகரில் மட்டுமின்றி தாம்பரம், குரோம்பேட்டை, பரங்கிமலை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் குடில்களும் ஸ்டார்களும் விறுவிறுப்பாக விற்பனை ஆகி வருகின்றன. அதுமட்டுமல்லாமல், இன்னொரு புறம் கிறிஸ்துமஸ் கேக் ஆர்டர்களும் பேக்கரிகளில் மும்முரமாக பதிவுசெய்யப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT