Published : 11 Mar 2014 12:00 AM
Last Updated : 11 Mar 2014 12:00 AM
நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி நிறுவனங்கள் நல்லொழுக்கக் கல்வியை அளிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ரோசய்யா கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்துகொண்டார். அதிக மதிப்பெண்கள் பெற்ற மற்றும் விளையாட்டு, இசை உள்ளிட்டவற்றில் சாதித்த 20 மாணவிகளுக்கு பதக்கம், பரிசுகளை வழங்கி ரோசய்யா பேசியதாவது:
இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவிகள் படிப்பில் அதிக மன அழுத்தத்தையும் கடும் போட்டியையும் எதிர்கொண்டு வருகிறார்கள். இதனால், புத்தகப் படிப்பு சார்ந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
மாணவர்களுக்கு மதிப்பீடு சார்ந்த கல்வியை அளிக்க உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் முன்வரவேண்டும். தேச வளர்ச்சிக்கு மனிதாபிமான அணுகுமுறையுடன் கூடிய நல்லொழுக்கக் கல்வி அவசியம். எனவே, உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் தேச வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு நல்லொழுக்கக் கல்வியை அளிக்கவேண்டும்.
இவ்வாறு ரோசய்யா கூறினார்.
விழாவில், இளநிலை முடித்த 850 பேர், முதுகலை முடித்த 76 பேருக்கு பட்டமளிக்கப்பட்டது. மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி தலைவர் ஆபிரகாம் ஜக்காரியா, முதல்வர் ரிட்லிங் மார்கரெட் வேல்லர், துணை முதல்வர் நளினி சிங்காரவேலு, டீன்கள் செல்வி ஞானசேகரன், மார்கரெட் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT