Published : 12 Oct 2014 10:20 AM
Last Updated : 12 Oct 2014 10:20 AM
கட்டண உயர்வு, மின் பகிர்மானம் தொடர்பான கருத்துக்கேட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைகள் குளறுபடியை ஏற்படுத்துவதாக நுகர்வோர் மற்றும் தொழிற்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம், சென்னை, நெல்லை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு நுகர்வோர் மற்றும் தொழிற்துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) துணைத் தலைவரும், மதுரை சிறு, குறு தொழில்கள் சங்க (மடீட்சியா) தலைவருமான வி.எஸ்.மணிமாறன் கூறியதாவது:
தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மட்டுமே தொழிற்துறையின் மையமாக விளங்குகின்றன. தென் மாவட்ட தொழிற்துறையினரின் மையமாக திகழும் மதுரையில்தான் வழக்கமாக மின் கட்டணம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கும். ஆனால், இந்த ஆண்டு மதுரையில் கூட்டம் இல்லை என்பது தொழிற்துறையினருக்கு பெரும் ஏமாற்றமானது. மேலும் சிறு, குறுந் தொழில்களுக்கு அதிகபட்சமாக மின் கட்டணம் உயர்த்துவது கண்டனத்துக்குரியது. மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, மீண்டும் மின்வெட்டு அமலாகியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெறும்கண் துடைப்பு நடவடிக்கைகள் எடுக்காமல், உண்மையில் நுகர்வோர் மற்றும் அரசு இரு தரப்பு நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மணிமாறன் கூறினார்.
மின் வாரியம் ஆண்டுதோறும் அளிக்கும் உத்தேச வருவாய், செலவுக் கணக்கு விவரத்தை இந்த முறை தாக்கல் செய்யவில்லை. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தாமாக முன் வந்து, அவர்களாகவே மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கிட்டு மின் கட்டணத்தை உயர்த்துகின்றனர். இதுகுறித்து தொழிற்துறை மற்றும் நுகர்வோர் அமைப்புகளிடம் எந்தவிதமான ஆலோசனையும் செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபற்றி அனைத்து தொழிற்துறை கூட்டமைப்பான தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் (டீகா) தலைவர் டி.பாலசுந்தரம் கூறும்போது, ‘‘ஏ.ஆர்.ஆர். எனப்படும் வருவாய், செலவுக் கணக்கை மின் வாரியம் தாக்கல் செய்யவில்லை. அதனால் மின் வாரியத்தின் கடமையை ஒழுங்குமுறை ஆணையமே மேற்கொண்டுள்ளது. தொழிற்துறையினர் அதிகமாக இருக்கும் கோவை, திருச்சி மற்றும் மதுரையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாதது மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது’’ என்றார்.
தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் டி.சடகோபன் கூறியதாவது:
மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது, ஏதோ மின் கட்டண உயர்வுக்கு மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளும் அமைப்பு என்பது போன்று செயல்படுகிறது. இந்த அமைப்பு, நுகர்வோரின் நலன்களை கருத்தில் கொள்வதில்லை. மின் பற்றாக்குறை, மின் விநியோகப் பிரச்சினைகள், மின் வாரிய செயல்பாடு, மின் துறை குறித்த மக்களின் பாதிப்பு போன்றவற்றுக்கு ஏற்ப ஒவ்வொரு முடிவுகளையும் அவ்வப்போது கருத்துக்கேட்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும்.
ஆனால், கட்டண உயர்வின்போது மட்டுமே கருத்துக்கேட்பு என்ற சம்பிரதாய சடங்கை செய்கின்றனர். இது மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 மணி நேரத்துக்குமேல் மின் விநியோகம் தடைபட்டால், நுகர்வோருக்கு இழப்பீடு வாங்கித் தர வேண்டும். இதையெல்லாம் ஒழுங்கு முறை ஆணையம் கவனிப்பதில்லை. ஒழுங்காக நடந்து கொண்டிருந்த கருத்துக்கேட்பு கூட்டத்தையும், ஊர்களை மாற்றி எண்ணிக்கையைக் குறைத்து, மேலும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
இவ்வாறு சடகோபன் கூறினார்.
அறிவுரைக் குழு கூட்டம் தாமதம்
வழக்கமாக மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்துக்கு முன்பு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மாநில அறிவுரைக் குழுக் கூட்டம் கூட்டப்படும். அதில் உறுப்பினராக இருக்கும் அரசுத் துறை, தொழிற்துறை, நுகர்வோர், வணிக பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தப்படும். ஆனால், இம்முறை இன்னும் அறிவுரைக்குழு கூட்டத்தை நடத்தவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT