Published : 21 Mar 2014 07:04 PM
Last Updated : 21 Mar 2014 07:04 PM
தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி குறைந்ததால், மீண்டும் ஒரு மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. சென்னையிலும் பல இடங்களிலும், குறைந்த அளவில் மின்வெட்டு அமலானது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இருந்த பல மணி நேர மின்வெட்டு, புதிய மின் நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்ததால், வெகுவாகக் குறைக்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்டு வந்த கூடங்குளம், வள்ளூர் மின் நிலையங்களிலும், தமிழக மின் வாரியம் சார்பிலான மேட்டூர் மற்றும் வட சென்னை அனல் மின் நிலையங்களிலும், மின் உற்பத்தி தொடங்கியது.
இதனால் தேவைக்கேற்ற மின்சாரம் உற்பத்தியானதால், தமிழகத்தில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும், மின் வெட்டு நீக்கப்பட்டு, முழுமையான மின்சாரம் வழங்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. கடந்த இரு தினங்களாக பல்வேறு மாவட்டங்களில், மின் விநியோகம் அவ்வப்போது தடைபட்டது.
வியாழக்கிழமை சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், பல பகுதிகளில் ஒரு மணி நேரம் மின்சார விநியோகம் தடைபட்டது. வியாழக்கிழமை நிலவரப்படி, 18 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம், மின் தடையால் சமாளிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது காற்றாலை மின்சார உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி, 7,140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலைகளில், வெறும் 20 மெகாவாட் மட்டுமே உற்பத்தியானது. புதன் நள்ளிரவில் வெறும் 14 மெகாவாட் தான் கிடைத்தது.
இதேபோல் மேட்டூர் புதிய மின் நிலையத்தில் இயந்திரக் கோளாறால் 600 மெகாவாட் உற்பத்தியும், எண்ணூர் மின் நிலையத்தின் மூன்று அலகுகளில் 280 மெகாவாட், ஆந்திராவிலுள்ள ராமகுண்டம் மின் நிலையத்தில் 500 மெகாவாட், கர்நாடகா கைகா அணு மின் நிலையத்தில் 220 மெகாவாட் உற்பத்தி பாதித்துள்ளது. இது நீண்ட கால பிரச்சினையல்ல. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT