Published : 30 Jan 2014 05:21 PM
Last Updated : 30 Jan 2014 05:21 PM
தமிழகத்தில் எந்தவிதமான பெரிய அளவிலான சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகளும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையோடு தெரிவிப்பதாக ஆளுநர் ரோசய்யா குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய ஆளுநர் ரோசய்யா, "பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து பொது அமைதியை நிலைநிறுத்துவது, சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவையாகும்.
இந்த அரசு பொறுப்பேற்றது முதல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த அரசால் உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளின் காரணமாக, மாநிலத்தில் பொது அமைதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
சட்டத்தை நிலைநாட்டும் நிர்வாக அமைப்புகள் எடுத்த சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக, பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள திருவிழாக்களும், தலைவர்களின் நினைவு தின நிகழ்ச்சிகளும் அமைதியாக நடந்தேறியுள்ளன.
தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இணையும் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தளம் அமைப்பதற்காக எடுத்த முயற்சிகளும் தொடர் கண்காணிப்பு மூலம் முறியடிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் சமூக ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்க முயற்சி செய்த சமூக விரோத சக்திகள் ஒடுக்கப்பட்டுள்ளன. முதல்வரின் உறுதியான, தீர்க்கமான முடிவுகளின் காரணமாகவே, மாநிலத்தில் எந்தவிதமான பெரிய அளவிலான சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகளும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையோடு தெரிவிக்க விரும்புகிறேன்" என்றார் ஆளுநர் ரோசய்யா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT